பங்குச் சந்தைகளில் திடீர் ஏற்றம்

தினமணி  தினமணி
பங்குச் சந்தைகளில் திடீர் ஏற்றம்

இரண்டு வர்த்தக தினங்களாக சரிவைக் கண்ட இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை திடீர் ஏற்றம் கண்டன.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும்பட்சத்தில், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளிலிருந்து அதிக அளவில் அன்னிய முதலீடு வெளியேறும் என்ற நிலைப்பாட்டால் இரண்டு வர்த்தக தினங்களாக பங்குச் சந்தைகளில் சுணக்க நிலை நிலவியது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கிய போதும் பங்குச் சந்தைகளில் மந்த நிலை நீடித்ததது. பிற்பகலில் முதலீட்டாளர்கள் மோட்டார் வாகனம், மற்றும் பொறியியல் பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை அதிக அளவில் வாங்கியதை அடுத்து பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன.

மோட்டார் வாகனத் துறை பங்குகளின் விலை சராசரியாக 1.44 சதவீதம் அதிகரித்தது. பொறியியல் துறை பங்குகளின் விலை 1.17 சதவீதமும், உலோக துறை பங்குகளின் விலை 1.07 சதவீதமும் உயர்ந்தன. எண்ணெய்-எரிவாயு,வங்கி, நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் முதலீட்டாளர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன.

டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 4.18 சதவீதம் உயர்ந்தது. இதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (2.85%), ஹீரோ மோட்டோகார்ப் (2.81%), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (2.06%),

எல் & டி (1.99%), அதானி போர்ட்ஸ் (2.31%) ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலையும் கணிசமான அளவுக்கு அதிகரித்தன. இருப்பினும், தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த விப்ரோ மற்றும் டி.சி.எஸ். பங்குகளின் விலை 2.33 சதவீதம் வரை சரிவைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 120 புள்ளிகள் அதிகரித்து 27,902 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 34 புள்ளிகள் உயர்ந்து 8,607 புள்ளிகளாக நிலைத்தது.

 

மூலக்கதை