இசைக் கலைஞர் திருவுடையான் சாலை விபத்தில் பலி
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த தமிழிசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான ப.திருவுடையான் சாலை விபத்தில் இறந்தார்.
சங்கரன்கோவில் கோமதியாபுரம் 5ஆம் தெருவைச் சேர்ந்த பழனி மகன் ப.திருவுடையான் (51). தமிழிசைப் பாடகரான இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலராகவும் இருந்தார்.
இவர் சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் சங்கரன்கோவில் திரும்பிக் கொண்டிருந்தார். மதுரை வாடிப்பட்டி புறவழிச்சாலை அருகே வந்தபோது சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில், திருவுடையான் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை சங்கரன்கோவிலில் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழிசைப் பாடகர்: திருவுடையான் தமிழகம் முழுவதும் கலை இலக்கிய மேடைகளில் தமிழிசை பாடிவந்தார். தவிர தனியார் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் பாடிவந்தார். மேலும், வெளிநாடுகளிலும் தமிழ்ச் சங்கம் நடத்திய நிகழ்ச்சிகளில் பாடி தமிழிசைக்கு சிறப்பு சேர்த்தவர்.
திரைப்படத்தில் முதன்முதலாக, கமல்ஹாசன் நடித்து இளையராஜா இசை அமைத்த விருமாண்டி படத்தில் "கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்' என்ற பாடலை பாடினார். இதைத் தொடர்ந்து, பார்த்திபனின் இவன், மதயானைக் கூட்டம், வெளிவரவுள்ள களவாடியபொழுதுகள், மயில் உள்ளிட்ட படங்களில் இவர் பாடியுள்ளார். கவிஞர் கனிமொழி எழுதியுள்ள இசை ஆல்பம் ஒன்றிலும் பாடியுள்ளார்.
பாடலரசன், மக்களிசைப் பாடகர், நகரின் சாதனையாளர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள திருவுடையான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக இருந்து கட்சிப் பணியும் ஆற்றினார். இறந்த ப.திருவுடையானுக்கு சங்கரஆவுடையம்மாள் என்ற மனைவியும், அன்பரசி, அறிவரசி என்ற இரு மகள்களும், பழனிபாரதி என்ற மகனும் உள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
