மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகர் அருண் விஜய் மீது வழக்கு

தினமணி  தினமணி
மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகர் அருண் விஜய் மீது வழக்கு

குடிபோதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனத்தில் மோதியதாக பிரபல திரைப்பட நடிகர் அருண் விஜய் மீது பாண்டி பஜார் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவுக்கு பின், தனது ஆடி காரில் அவர் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

காரில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அருண் விஜய் காயங்களின்றி தப்பினார். இருப்பினும் இந்த விபத்தில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. மற்ற யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

அருண் விஜய் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், மோட்டார் வாகனச் சட்டத்தின் 185-ஆவது பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 279 -ஆவது பிரிவு ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை