விமரிசகர்களின் கட்டுப்பாட்டில் வாழ முடியாது சொல்கிறார் பிங்க் பேபி டாப்ஸி பன்னு!

தினமணி  தினமணி
விமரிசகர்களின் கட்டுப்பாட்டில் வாழ முடியாது சொல்கிறார் பிங்க் பேபி டாப்ஸி பன்னு!

தமிழில் காஞ்சனா 2 ல் பேயாக வந்து ரசிகர்களை கலங்கடித்துச் சென்ற டாப்ஸி அடுத்ததாக வெளிவரவுள்ள தனது இந்திப்படம் பிங்க் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதோடு பாலிவுட், டோலிவுட் மற்றும் ஹோலிவுட் குறித்த தனது தனிப்பட்ட அபிப்பிராயங்களையும் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.  டாப்ஸியுடனான உரையாடல்;

ஹிந்திப்படங்களில் மொழி உணர்ந்து நடிக்க முடிவதை வசதியாக இருக்கிறது...

அடிப்படையில் டெல்லி பெண்ணான நான்  ஹிந்திப்படங்களில் மொழி உணர்ந்து நடிக்க முடிவதை வசதியாக உணர்கிறேன். பாலிவுட்டில் எனக்கு தனியாக மொழிபெயர்ப்பாளர்கள் தேவை இல்லை. தென்னிந்திய படங்களில் நடிக்கும் போது அப்படி இருக்க முடியாது, அந்தந்த ஊர் பாஷைகளை அதற்குண்டான உணர்வுகளோடு பேசி நடிக்க வேண்டும், அதற்கு எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறரது உதவி தேவைப்பட்டிருக்கிறது ஆனால் ஹிந்திப் படங்களில் அப்படி இல்லை எனக்கு மொழிப்பிரச்சினை இல்லாததால் எளிதாக நடிக்க முடிவது வசதியாக இருக்கிறது.

பிங்க் படம் பற்றி...

பாலிவுட்டைப் பொறுத்தவரை எனக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்த ’பேபி’ படத்தை அடுத்து வெளிவரவிருக்கும் படம் "பிங்க்". சுஜித் சிர்கர் தயாரிப்பில் வங்காள இயக்குநர் அனிருத்தா ராய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் சோஷியல் திரில்லர் வகைப்படமான இதில் நான் அமிதாப்புடன் நடித்திருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. படத்தின் டீஸர் உண்டாக்கிய பரபரப்பை வைத்தே ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்ளலாம். பிங்க் படத்தில் எனது கதாபாத்திரம் "பாலியல் வன்முறையால்' பாதிப்புக்குள்ளான பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்ற விசாரணை என்ற பெயரில் மீண்டும், மீண்டும் பாலியல் வன்முறைக்கு ஈடான அவலத்தில் துன்புறுத்தப்படுவதை வெளிப்படுத்துவது தான் படத்தின் மையக்கரு, இத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்க நிறைய தன்னம்பிக்கையும், தைரியமும் வேண்டும். தனக்கான பாதிப்புக்கு நியாயம் கேட்டு கடைசி வரை போராடும் பெண் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனே இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். சொல்லப் போனால் சுதந்திரமாக இயங்கும் மனோபாவம் கொண்ட டெல்லிப் பெண்ணான எனது இயல்பான குணமும் அதுவே தான், நான் நியாயம் என்று நினைக்கும் விசயங்களை யாருக்காகவும், எதற்காகவும் நான்  விட்டுக் கொடுத்ததில்லை.

தமிழ், தெலுகு, மலையாளம் என இதுவரை டாப்ஸி தர வரிசைப் பட்டியலில் முன்ணணியில் இருக்கும் A லிஸ்ட் ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். பொதுவாக சில வட இந்திய நடிகைகள் மற்றும் தென்னிந்திய நடிகைகளுக்கு ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களான தாங்கள் மதிக்கப் படவில்லையோ எனும் மனக்குறைபாடு இருந்து வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் நடிகை ராதிகா ஆப்தே, சமீபத்தில் தான் ராதிகா ஆப்தே   திரையுலகில் பொதுவாக ஹீரோக்களுக்கு அடுத்த இரண்டாம் நிலையில் தான் ஹீரோயின்கள் மதிக்கப்படுகிறார்கள், இது சரியில்லை என்பதாக எதிர்ப்புக் குரல் எழுப்பி இருந்தார். டாப்ஸி இது குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்; 

திரையுலகில் ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்கள் மதிக்கப்படாததைப் பற்றி...

அதை நான் மறுக்கவில்லை. தென்னிந்திய திரைப்படங்களில் நான் இதுவரை பணிபுரிந்ததெல்லாம் முன்னணி ஹீரோக்களுடன் எனும் போது அவர்கள் எனக்கு முன்பே இங்கு நன்கு அறிமுகமானவர்கள். அவர்களுக்கான மதிப்பை அவர்கள் பல வருடங்களாக தங்களது நடிப்புத் திறமை மூலம் ஈட்டியிருக்கிறார்கள் அதை எனக்கான மதிப்புகுறைவென்று நான் தாழ்வுணர்ச்சி கொள்ளவேண்டியதில்லை. நான் அறிமுகமாகி சில வருடங்களே ஆகின்றது. செட்டிற்குள் நுழையும் போதே என்னை  மகாராணி போல நினைத்துக் கொண்டு எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினால் எனக்கு ‘இதென்ன மிரட்டலாக இருக்கிறதே’ என்று தான் நினைக்கத் தோன்றும்.

பிங்க் மாதிரி வித்யாசமான படங்களுக்குப் பிறகும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி டான்ஸ் ஆடி நடிப்பீர்களா?

ஏன் நடிக்கக் கூடாது?  நான் நடிகை, குறிப்பிட்ட வேடங்களில் தான் தொடர்ந்து நடிக்க வேண்டும் அல்லது இப்படியான வேடங்களில் நடிக்கவே கூடாது என்றெல்லாம் எந்த வரையறையும் எனக்கு கிடையாது. எனது நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வரும் பலவிதமான பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கவே எனக்கு விருப்பம். அது மரத்தைச் சுற்றி டான்ஸ் ஆடுவதாக இருந்தால் என்ன? எனது எனர்ஜி லெவலை அதிகரிக்க ஜாலியான படங்களில் நடிப்பதும் எனக்கு முக்கியம் தான்.

டாப்ஸியைப் பற்றி டாப்ஸியே  சொல்லிக்கொள்ள விரும்புவது?

டாப்ஸி எப்போதுமே சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் பெண். இதுவரை  எனது வேலைகளில் குடும்பம் தலையிட்டதில்லை. நான் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்களுக்கும், திரைப்படங்களுக்கும் நானே முழு பொறுப்பு. அதன் நன்மைகளும் தீமைகளும் என்னை மட்டுமே சார்ந்தது. எனது முடிவுகளில் ஏதாவது சரியில்லையென்றால் என்னை நானே  மிக மோசமாக சுய விமரிசனம் செய்து கொள்வேன். நான் செய்யும் எல்லா விஷயங்களிலும் எனக்கு நானே தவறுகளை கண்டுபிடித்து திருத்திக் கொள்ள முயற்சி செய்வேன். ஒவ்வொரு படத்தையும் ஒப்புக் கொள்வதற்கு முன் படத்தில் எனது கதாபாத்திரம்   பற்றிய புரிதலுக்காகவும் , படத்தில் இயக்குனரின் எதிர்பார்ப்பு என்ன என்பதை பற்றி உணர்ந்து கொள்வதற்காகவும் நான் சில நாட்கள் அவகாசம்  எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் பிங்க் படத்தில் அமிதாப்புடன் பணியாற்றும் போது அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு அவர் தயாரான வேகத்தைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.  இத்தனை விரைவில் ஒரு மனிதரால் பாத்திரத்துடன் ஒன்றி நடிக்க முடியும் என்பது மிகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது எனக்கு.அதே போல தமிழில் அஜித், ஆர்யா இருவரும் உடன் நடிப்பவர்களையும் ஆற்றலுடன் செயல்படும் வகையில் மாற்றத்தக்கவர்கள். ஆடுகளம் படத்திற்கு பிறகு நான் உணர்ந்த விசயம்; எனது இணை நடிகர்கள் உற்சாகத்துடன் இருந்தால் திரையில் எனது நடிப்பும் அருமையாக அமைந்து விடுகிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

விமர்சகர்கள் மற்றும் சோஷியல் மீடியா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விமர்சனங்கள் குறித்து நிச்சயம் வருத்தப்படுவேன், அது நல்ல விமர்ச்சனமாக இல்லா விட்டால் அடுத்த முறை எனது நடிப்பைப் பற்றி  நல்ல விதமாக விமரிசனம் வரும் வரை அந்த வருத்தம் நீடிக்கும். எது நடந்தாலும் இந்த  உலகில் நடிகர்கள் தான் மிகவும் பாதிப்படையக் கூடிய இனமாக இருக்கிறார்கள். எங்களது  தனிப்பட்ட வாழ்க்கை, திரை வாழ்க்கை எல்லாமும் எல்லோராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதனால் விமர்ச்சனங்கள் குறித்து நாங்கள்  கவலைப் படாமல் இருக்க முடியாது. அந்தக் கவலை நெடுநாள் நீடிக்க வாய்ப்பில்லாமல் அடுத்த முறை எங்களை பற்றி நல்ல விதமாக விமர்ச்சனம் வர வேண்டும் என்று காத்திருப்போம். ஆனால் நடிகை என்பதற்காக என்னை விமர்ச்சிப்பவர்களின் கட்டுப்பாட்டில் நான் வாழ முடியாது. எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை உண்டு அதை நான் எனக்குப் பிடித்த மாதிரி வாழ்வேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன். மேலும் பிரபல நடிகர் நடிகைகளின் வாழ்க்கை என்பது கதவுகள் மற்றும் ஜன்னல்கள் இல்லாத வீட்டில் வாசிப்பதை போன்று வெளிப்படையானது, அப்படியான காலகட்டம் குறுகியதே. நடிகையாக வாழ்வதென்பது ஒரு நாள் முடிவுக்கு வரும். அப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போதே நான் யோசித்துக் கண்டடைவேன்.

உடற்பயிற்சி...

நான் அதிகாலையில் விழித்தெழும் பழக்கம் கொண்டிருப்பதால் தினமும் காலையில் இரண்டு மணி நேரம் ஸ்குவாஷ் விளையாடுவதை தவறாமல் செய்து வருகிறேன்.

உங்களது பலம், பலவீனம்?

தன்னம்பிக்கை, சுதந்திரமாகச் செயல்படுவது எனது பலம். தனிமையில் இருக்க விரும்பாதது எனது பலவீனம். பேசுவதற்கு ஆட்களே இல்லாமல் தனிமையில் இருப்பதென்றால் எனக்குப் பயம்.

ஹாபி?

பிராண்டட் ஷூக்களை சேகரிப்பது எனக்குப் பிடித்த ஹாபி. எனது வீட்டில் ஒரு அறை முழுதும் ரீ மாடல் செய்து ஷூக்களுக்கான கண்காட்சி போல அடுக்கி வைத்திருக்கிறேன். விதம் விதமான ஃப்ரிஜ் மேக்னட்டுகளை சேகரிப்பதும் கூட எனக்குப் பிடித்த ஹாபியே!

நடிகை என்பதை தவிர்த்து டாப்ஸியின் உலகம்...

நடிக்க வருவதற்கு முன் நான்  கம்பியூட்டர் எஞ்சியனியரிங் மாணவி. அதற்காக டாப்ஸிக்கு படிப்பதென்றால் மிக இஷ்டம் என்று நினைத்து விட வேண்டாம். திரைப்பட ஸ்க்ரிப்ட் புத்தகம் தவிர வேறு எந்தப் புத்தகம் என்றாலும் படிக்கத்  தொடங்கிய சில நிமிடங்களில் தூக்கம் வந்து விடும் எனக்கு . மிகவும் பிடித்த விஷயம் பயணங்கள். பயணங்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் தான் மனிதர்களை செழுமைப்படுத்துகின்றன. பயணத்திற்கு அடுத்த படியாக தேடித் தேடி நல்ல உணவுகளை சாப்பிட பிடிக்கும். பசியோடு இருப்பது பிடிக்கவே பிடிக்காது. டான்ஸ் பிடிக்கும். சியமாக் தவாரின் நடனப் பள்ளியில்  ஆறு வருடங்களாக 'கதக்' கற்று வருகிறேன். தெய்வ நம்பிக்கை உண்டு ஆனால் மதம் சார்ந்த நம்பிக்கையில்லை. மூடநம்பிக்கை அறவே பிடிக்காது.  இது தான் டாப்ஸி.

கட்டுரை ஆங்கில மூலம் - நீலிமா மேனன்

மூலக்கதை