பிப்ரவரி 13ல் இருந்து நாம் தமிழர் கட்சி பிரச்சாரத்தை தொடங்குகிறது : சீமான்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (19:30 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (19:30 IST)

 பிப்ரவரி 13ல் இருந்து நாம் தமிழர் கட்சி 

பிரச்சாரத்தை தொடங்குகிறது : சீமான்

 

திருப்பரங்குன்றத்தில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் திருமுருகப் பெருவிழா நடந்தது. விழாவையொட்டி சன்னதி தெருவில் உள்ள மயில் மண்டபம் அருகில் இருந்து கோவில் வரை ஊர்வலம் நடந்தது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கையில் வேல் ஏந்தி இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின்னர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து மயில் மண்டபம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது.

முன்னதாக சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ‘’தமிழர் நிலத்தில் அழிந்து வரும் பண்பாடு மற்றும் தமிழனின் தொன்மை, வீர அடையாளங்களை காப்பதற்கும், பல்வேறு வகையில் சிதைவுற்று கிடக்கும் நமது பண்பாட்டு பேருண்மைகளை மீட்பதற்கும் நாம் தமிழர் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. வீர தமிழர் முன்னணி மூலம் தமிழகம் முழுவதும் திருமுருகன் குடில் அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் முழுமையான மக்கள் ஆட்சியை நாம் தமிழர் கட்சி தரும். வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். இதற்காக வருகிற பிப்ரவரி 13–ந்தேதி கடலூரில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிவிக்கப்படுவார்கள். அங்கு இருந்து தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும்’’என்று தெரிவித்தார்.

மூலக்கதை