ஏரியை ஆக்கிரமித்துள்ள அஇஅதிமுக பிரமுகர்கள்: தமிழக அரசுக்கு ஜி.ரா. கடிதம்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:56 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (15:7 IST)

ஏரியை ஆக்கிரமித்துள்ள அஇஅதிமுக பிரமுகர்கள்: தமிழக அரசுக்கு ஜி.ரா. கடிதம்

காஞ்சிபுரம் மாவட்டம் - மூவரசம்பட்டு கிராமம், சர்வே எண் - 44ல், 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை ஆக்கிரமித்துள்ள அஇஅதிமுக கட்சி பிரமுகர்கள் - பல்லாவரம் நகராட்சி பொதுநிதியிலிருந்து தனியார் கல்குவாரிக்கு சாலை அமைத்ததுடன், கட்சி அலுவலகமாக மாற்றி பிளாட் போட்டு விற்பனை செய்யும் முயற்சி நடக்கிறது. உடனே தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இன்று (28.1.2016) தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேலும், கண்டபடி மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள மூவரசம்பட்டு ஏரியினை ஆளும் அஇஅதிமுக கட்சியினர் ஆக்கிரமித்து அலுவலகம் கட்டியுள்ளதையும், ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் நடத்தும் கல்குவாரிக்கு சாலை வசதி செய்து தர ஏரியின் குறுக்கே அரசின் செலவில் ஏரியின் ஊடாக சாலை அமைத்துள்ளதையும் 27.1.2016 அன்று தினமலர் நாளிதழ், சென்னை பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட சாலையை கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா அவர்கள் திறந்து வைத்துள்ளார். இவையனைத்தும் சட்டத்திற்கு புறம்பானதும், பொது இடத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதும், பொதுநிதியை தனியார் வசதிக்கு பயனபடுத்துவதும் ஆகும். தொடர்ச்சியாக ஏரியை பிளாட் போட்டு விற்கும் முயற்சியிலும் சிலர் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் பெய்த கன மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ள சேதங்களும், கட்டமைப்பு சேதங்களையும், பொருட்சேதங்களையும், உயிரிழப்புகளையும் மனதில் நீங்கா பயத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இதையொட்டி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அனைத்துப் பகுதியினரும் முன்வைத்துள்ளனர். இதை சாக்காக்கி பல இடங்களில் ஏழை மக்களின் குடிசைகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஏரிக்குள் ஆளுங்கட்சி பிரமுகர்கள் கட்சி அலுவலகம் அமைப்பதும், பொது பணத்தை தனியார் குவாரிக்கு சாலை அமைக்க செலவிடுவதும், அமைச்சரே திறந்து வைப்பதும் அதையொட்டி ஏரியை பிளாட் போட்டு விற்க சிலர் முயற்சிப்பதும் மிகவும் கண்டனத்திற்குரிய நடவடிக்கைகள்.

தங்கள் மேலான உடனடி தலையீட்டின் மூலம் ஏரிக்குள் அமைக்கப்பட்டுள்ள ஆளும் கட்சி அலுவலகத்தை உடனே அப்புறப்படுத்த வேண்டுமென்றும், ஏரிக்குள் சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சாலைக்கு செலவிடப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க வேண்டுமென்றும், அதற்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

மூலக்கதை