கேரள முதல்வர் உம்மன்சாண்டி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
கேரள முதல்வர் உம்மன்சாண்டி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய திருச்சூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் முகமது மீதும் வழக்குத்தொடர நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும்  சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, முக்கிய குற்றவாளியான நடிகை சரிதா நாயர் நேற்று கூறியிருந்தார். 

சூரிய மின் தகடு ஊழல் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி சிவராஜன் தலைமையிலான ஆணையத்தின் முன் நேற்று ஆஜரான சரிதா நாயர், மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் முகமதுவுக்கு 40 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தாகவும் தெரிவித்திருந்தார். 
உம்மன் சாண்டியின் உதவியாளர் தாமஸ் குருவில்லாவிடம் டெல்லி விஞ்ஞான் பவனில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் 80 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் நீதிபதி சிவராஜனிடம் சரிதா நாயர் வாக்குமூலம் அளித்தார். 

இதனை தொடர்ந்து உம்மன் சாண்டி மீது வழக்கு பதிவு செய்ய கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதனிடையே ஊழல் புகாரில் சிக்கியுள்ள முதலமைச்சர் உம்மன் சாண்டியை பதவி விலகக்கோரி கேரளாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. திருவனந்தபுரத்தில் உம்மன் சாண்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை, 
கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர்  கலைத்தனர்.

மூலக்கதை