டாஸ்மாக் கடைக்குள் மட்டையான விற்பனையாளர்: சஸ்பெண்ட் செய்து மேலாளர் உத்தரவு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (9:1 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (9:2 IST)

டாஸ்மாக் கடைக்குள் மட்டையான விற்பனையாளர்: சஸ்பெண்ட் செய்து மேலாளர் உத்தரவு

குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து “டாஸ்மாக்” கடைகளும் அடைக்கப்பட்டன. புதன்கிழமை காலை, 10-மணிக்கு வழக்கம்போல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

ஆனால், நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள, '6124' எண் கொண்ட டாஸ்மாக் கடை, காலை, 10 மணியைக் கடந்தும் திறக்கவில்லை. தகவலறிந்து, அங்கு வந்த அதிகாரிகள், கடையின் ஷட்டர் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், மற்ற கடையில் வேலைசெய்யும் ஊழியர்கள் துணையுடன் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்றனர். அங்கு, கடை விற்பனையாளரான இராசிபுரத்தை சேர்ந்த இராஜா என்பவர் போதை தலைக்கேறிய நிலையில், மட்டையாகி கிடந்தார்.

மேலும், குடியரசு தினத்துக்கு முதல் நாள் விற்பனை செய்யப்பட்ட தொகையும் உள்ளே அப்படியே இருந்துள்ளது. இதையடுத்து, மாற்று ஊழியரைக் கொண்டு கடை விற்பனையை தொடர்ந்தனர். கடைக்கு விடுமுரையானாலும், கடையை கவனித்துக் கொள்வதற்காக வந்த இராஜா சரக்கடித்துவிட்டு போதையில் தூங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடை விற்பனையாளர் இராஜாவை, டாஸ்மாக் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் “சஸ்பெண்ட்” செய்துள்ளனர்.

சிவசுப்பிரமணியன்

மூலக்கதை