80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (7:55 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (7:55 IST)

80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி பஸ் டிப்போவில் டிரைவராக பணியாற்றியவர் சிவக்குமார். இவர் சென்னையில் இருந்து தடா வழியாக திருப்பதிக்கு செல்லும் பேருந்தை ஓட்டி வந்தார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து தடா வழியாக திருப்பதிக்கு அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார். அப்போது தடா அருகே பேருந்து சென்றபோது, திடீரென பேருந்து வேகம் குறைந்து சாலையோரம் சென்றது. 

பேருந்தில் இருந்த பயணிகள் அலறி சத்தம் எழுப்பினர். சிவக்குமார் பேருந்தை நிறுத்திவிட்டு, ஸ்டேரிங் மேலேயே சாய்ந்தார். கண்டக்டர் ஸ்ரீதர், அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தார். எந்த பலனும் இல்லாததால், உடனடியாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, கண்டக்டர் ஸ்ரீதர், சிவக்குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிவக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனை அறிந்த பயணிகள், மாரடைப்பு வந்ததும் சுதாரித்துக்கொண்டு பேருந்தை சாலையோரம் நிறுத்திய சிவக்குமாரின் செயலை நினைத்து நெகிழ்ந்தனர். அவருக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செய்தனர். 

இதேபோல் டெப்போ மேனேஜர் உள்பட போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும், சிவக்குமாருக்காக அஞ்சலி செலுத்தினர். 80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய சிவக்குமாரின் செயலை பாராட்டி இரங்கல் நிகழ்ச்சியும் நடத்தினர்.

தேவேந்திரன்

மூலக்கதை