ஜெயலலிதா மீனவர்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (8:2 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (8:2 IST)

ஜெயலலிதா மீனவர்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு’ 4–ம் கட்ட பயணத்தில் புதன்கிழமை காலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த மீன் வியாபாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதையடுத்து மீனவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

நாட்டு மக்கள் நலனில் அதிக அக்கறை உள்ளவர்கள் மீனவர்கள். 1991–ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற உடன் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார். 25 வருடம் ஆகியும் கச்சத்தீவை மீட்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம்.

கலைஞர் முதல்–அமைச்சராக இருந்தபோது மீன் வளர்ச்சிக்கழகம் தொடங்கப்பட்டது. மீனவர்கள் கடனை தள்ளுபடி செய்தார். மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்தினார். சிறு துறைமுகங்களை உருவாக்கினார். 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு, என்ஜினீயரிங், டாக்டர் படித்த மீனவர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைகளை வழங்கினார்.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களை மீனவர்களின் நலனுக்காக கொண்டுவந்தார். சுனாமியின்போது மீனவர்களை கரைசேர்த்தது தி.மு.க. ஆட்சிதான். கலைஞர் தனது ஆட்சியில் மீனவர்களின் பிள்ளைகள் சட்டம் படித்தவர்களாகவும், என்ஜினீயர்களாகவும், டாக்டர்களாகவும் ஆகுவதையே விரும்பினார்.

ஆனால் ஜெயலலிதா மீனவர்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவத்தை தடுப்பதற்கு கூட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கடிதம் மட்டும் எழுதுகிறார். பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பலம் இருந்தும் வலியுறுத்துவதில்லை.

முதல்–அமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதா பிரதமரையோ, சம்பந்தப்பட்ட மந்திரிகளையோ நேரில் சந்தித்து பேசவேண்டும். இல்லையென்றால் மூத்த அமைச்சர்களையாவது சந்தித்து பேச வலியுறுத்தவேண்டும். முதல்–அமைச்சரை யாருமே நேரடியாக சந்திக்க முடிவதில்லை. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்களையும் சந்திக்க முடிவதில்லை.

முதல்–அமைச்சரை சந்திக்க அனுமதி கிடைத்திருந்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4¾ வருடங்கள் ஆகியும் எந்த பாலத்தையும் கட்டவில்லை. அம்மா அழைப்பு மையத்தை தொடர்புகொள்ள முடிவதில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

110 விதியை எப்படி பொய்யான வாக்குறுதிக்கு ஜெயலலிதா பயன்படுத்துகிறாரோ, அதுபோல அதில் ஒரு ‘0’ சேர்த்து 1100–ஐயும் அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் சதி வேலை. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம் தருவேன், செல்போன் கொடுப்பேன் என்றார். இதுவரை யாருக்கும் வழங்கியதாக தெரியவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் நாங்கள் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்குக்குத்தான் என்று கலைஞர் அறிவித்திருக்கிறார். அவர் சொன்னதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். இவ்வாறு பேசினார்.

மூலக்கதை