​மதிய உணவு திட்டத்தை நிறுத்த மத்திய அரசு முயற்சி ?

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​மதிய உணவு திட்டத்தை நிறுத்த மத்திய அரசு முயற்சி ?

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மதிய உணவு திட்டத்தை நிறுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என கல்வியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதிய உணவு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கிட்டதட்ட 12 கோடி குழந்தைகள் பயன்பெறுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது . இந்தியாவிலேயே மதிய உணவு திட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்படும் மாநிலமாக திகழ்வது தமிழகம் தான். இத்தகைய திட்டத்தை சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக நிறுத்த, தற்போது மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு சமைப்பதற்கு,  ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு 3 ரூபாய் 86 பைசாவும், உயர்நிலை பள்ளி குழந்தைகளுக்கு 5 ரூபாய் 78 பைசாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவீதமும்,  வடகிழக்கு மாநிலங்களுக்கு 90 சதவீதமும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. 10 சதவீத நிதியை மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. மற்ற மாநிலங்களில் மத்திய அரசு 60 சதவீதத்தையும், மாநில அரசுகள் 40 சதவீதத்தையும் பகிர்ந்து கொள்கின்றன. 

கடந்த பட்ஜெட்டில் மதிய உணவு திட்டத்திற்கு 9,236 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை வரும் பட்ஜெட்டில் மேலும் குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட மதிய உணவு திட்டம், காலை உணவு திட்டம் போன்றவற்றை அரசே நடத்துவதாகவும், இதன் மூலம் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை நீங்கி சமநிலை ஏற்படுவதாகவும் கல்வியாளர்கள் கூறுகின்றன. 

இந்தியா போன்ற வளரும் நாடுகளில்  மத்திய உணவு திட்டத்திற்கான பயன்கள் குறைக்கப்பட்டால் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவிக்கின்றனர். 
 
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய அரசின் இந்த நிலைபாட்டிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.  வரும் பட்ஜெட்டில் மதிய உணவு திட்டத்திற்கான நிதியை குறைத்தால் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். 

இந்த திட்டத்தில் குளறுபடிகள் இருந்தால், அதை சரி செய்வதற்கான வழி முறைகளை அரசு உடனடியாக ஆராய வேண்டும் என்றும், அதற்காக இந்த திட்டத்தை நிறுத்தக்கூடாது என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை