நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: தனது பாடல் வரிகளை மாற்றிய விஜய் ஆண்டனி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: தனது பாடல் வரிகளை மாற்றிய விஜய் ஆண்டனி

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான செய்தி எதிரொலியாக, பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை மாற்றிவிட்டதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். 

இட ஒதுக்கீட்டில் படித்த டாக்டர்களின் திறனை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பாடல் இடம்பெற்றிருந்தது. இட ஒதுக்கீட்டையும், இட ஒதுக்கீட்டில் படித்த டாக்டர்களையும் குறைத்து மதிப்பிடும் அந்த பாடலுக்கு மருத்துவர்களும், அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

பாடல் வரிகளை நீக்காவிட்டால், சட்டபூர்வ நடவடிக்கையில் இறங்குவோம் என இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். கடும் எதிர்ப்புக்கு பணிந்த விஜய் ஆண்டனி, தமது முகநூல் பக்கத்தில் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், பணபலம் படைத்த சிலர், தனியார் கல்வி நிறுவனங்களில் லட்சத்தையும் கோடிகளையும் கொடுத்து மருத்துவர்களாகி மருத்துவ சமுதாயத்துக்கு களங்கம் விளைவிப்பதைச் சுட்டிக்காட்டவே, ‘கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்’ என்ற பாடலை பாடலாசிரியர் வேல்முருகன் எழுதியதாக விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ளார். 

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளையே எடுத்துச் சொல்வதாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 'கோட்டா' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, "காசு கொடுத்து" என மாற்றி விட்டதாகவும் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

மூலக்கதை