ஈரான் மீதான சர்வதேச பொருளாதாரத் தடை நீக்கம்: பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
ஈரான் மீதான சர்வதேச பொருளாதாரத் தடை நீக்கம்: பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு

ஈரான் மீதான சர்வதேச பொருளாதாரத் தடை நீக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் கணிசமான அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அணு சக்தியை தவறான வழிகளில் பயன்படுத்துவதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இணைந்து பொருளாதார தடையை விதித்தன.

இதனால் அந்நாட்டிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை கட்டுபாடின்றி இறக்குமதி செய்யமுடியாத சூழல் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டது. 

இந்நிலையில் ஈரான் மீதான சர்வதேச பொருளாதாரத் தடை நேற்று நீக்கப்பட்டது. இதனால் ஈரான் அரசும் அந்நாட்டு மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொருளாதார தடை நீக்கப்பட்டநிலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தினமும் 5 லட்சம் பீப்பாய் வீதம் விரைவில் அதிகரிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஈரானிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெயை தடையின்றி இறக்குமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கூறியுள்ளது.
 
ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்று 25 டாலர் அளவிற்கு சரிந்துள்ள நிலையில் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் பெட்ரோலியப் பொருட்களின் விலை இந்தியாவில் மேலும் கணிசமான அளவிற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை