சிம்பு-அனிருத்துக்கு மீண்டும் சம்மன்: கோவை போலீசார் முடிவு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
சிம்புஅனிருத்துக்கு மீண்டும் சம்மன்: கோவை போலீசார் முடிவு

ஆபாச பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு மற்றும் இசை அமைப்பாளர்  அனிருத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.  

பெண்களை மிகவும் இழிவாக சித்தரித்து இணையத்தளங்களில் வெளியாகியுள்ள பீப் பாடலுக்கு எதிராக தமிழகம் எங்கும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சிம்பு, அனிருத்துக்கு எதிராக மகளிர் அமைப்பினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல்துணை ஆணையர் ஏ.அமல்ராஜிடம் புகார் மனு கொடுத்ததன் பேரில் கோவை  ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணைக்கு கடந்த 19ந்தேதி நேரில் ஆஜராகுமாறும் சிம்பு, அனிருத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் விளக்கக் கடிதம் மட்டுமே அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இருவருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பால் முகவர்கள் நலச் சங்கம்  சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிம்பு - அனிருத் மீது நேற்று  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை