‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன், தங்கர்பச்சானுக்கு ரூ.5 லட்சம் இலக்கியப்பரிசு;...

தினத்தந்தி  தினத்தந்தி
‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன், தங்கர்பச்சானுக்கு ரூ.5 லட்சம் இலக்கியப்பரிசு;...

சென்னை,

‘தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டு தோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது.

ரூ.5 லட்சம் இலக்கியப்பரிசு

மூத்த தமிழ் அறிஞருக்கு ரூ.3 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.2 லட்சமும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு முனைவர் அவ்வை நடராசன் ‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ் அறிஞர்’ விருது பெற்றார். அவருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையும், விருதும் வழங்கப்பட்டது. ‘சி.பா. ஆதித்தனாரின் இலக்கியப்பரிசு ஜி.பாலனுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையும், விருதும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு

இந்த ஆண்டு இலக்கியப்பரிசு பெறுவோர் விவரங் களை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அறிவித்து உள்ளார்.

‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ்அறிஞர் ‘‘விருது’’, ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன் ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

வா.மு.சேதுராமன்

மூத்த தமிழ் அறிஞர் விருது பெறும் ‘பெருங்கவிக்கோ’ முனைவர் வா.மு.சேதுராமன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் ஆண்டநாயக்கபுரத்தில் 9-2-1935-ல் பிறந்தவர். தந்தை: வா.முத்து. தாயார்: இராமாயி.

ஏழ்மையில் வளர்ந்தாலும், சுயமுயற்சியால் தமிழ் வித்துவான், முதுகலை எம்.ஏ., பி.எட். படித்துத்தேறி 1988-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டர் (பி.எச்.டி.) பட்டம் பெற்றவர்.

பல்வேறு ஊர்களில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். டாக்டர் பட்டம் பெற்றபின், ஆசிரியர் பணியை விட்டு விலகி, முற்றிலும் தமிழ்ப்பணி, பொதுப்பணிகளில் ஈடுபட்டார்.

45 ஆண்டுகளாக வெளிவரும் ‘‘தமிழ்ப்பணி’’ மாத இதழின் நிறுவனர், மற்றும் சிறப்பாசிரியர்.

கவிதைகள், சிறுகாப்பியங் கள், பயண இலக்கியங்கள், இலக்கிய ஆய்வுகள், பக்தி இலக்கியங்கள், மொழி பெயர்ப்பு என்று பல்வேறு துறைகளிலும் 100-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி உள்ளார்.

ஆதி மொழி தமிழ், ஆதி இனம் தமிழ் இனம் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் வரலாற்றை எடுத்துக்கூறும் விதத்திலும் ‘‘சேது காப்பியம்’’ என்ற பெருநூலை எழுதி வருகிறார். இதுவரை 6 பாகங்கள் வெளிவந்துள்ளன. இன்னும் 3 பாகங்கள் வெளிவரவேண்டும்.

இவருடைய ‘உலக உலா’ என்ற நூல் தமிழக அரசின் பரிசைப்பெற்றது. ‘‘கலைமாமணி’’ உள்பட பல பட்டங்கள் பெற்றவர்.

இவர் சிறந்த பேச்சாளர். எனவே வெளிநாடுகளில் நடைபெறும் தமிழ் மாநாடுகளுக்கு அழைக்கப்படுபவர். 2010-ம் ஆண்டில் நடந்த இவருடைய பவள விழாவில், சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் கலந்து கொண்டு இவருடைய தமிழ்ப்பணியை பாராட்டி ரூ.10 லட்சம் வழங்கினார்.

இலங்கை தமிழருக்காக அகில உலக ரீதியில் அமெரிக் காவில் 1982-ல் நடைபெற்ற முதல் மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர். இந்த மாநாட்டில் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழுக்காக 1993-ம் ஆண்டு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், நீதியரசர் வேணுகோபால் ஆகியோர் தொடங்கி வைத்த கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 50 நாட்கள் நடைபெற்ற நடைபயணத்தில் பங்கு கொண்டார்.

தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பி வரும் அரும் பணிக்கு, தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இவர் போகாத வெளிநாடுகள் அநேகமாக இல்லை எனலாம்.

தங்கர்பச்சான்

இந்த ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசை ‘‘கலைமாமணி’’ தங்கர்பச்சான் பெறுகிறார். இவருடைய ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்கு, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு (ரூ.2 லட்சம்) வழங்கப்படுகிறது.

திரைப்பட டைரக்டராகவும், ஒளிப்பதிவாளராகவும், எழுத்தாளராகவும் புகழ்பெற்ற ‘‘கலைமாமணி’’ தங்கர்பச்சான் கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டையில் 1962-ம் ஆண்டு பிறந்தார். இயற்பெயர் தங்கராஜ். வீட்டில் சுருக்கமாக ‘தங்கர்’ என்று அழைப்பார்கள். தந்தை பெயர் பச்சான். எனவே இரண்டையும் இணைத்து, ‘தங்கர் பச்சான்’ என்று வைத்துக்கொண்டார்.

கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போது, சினிமா ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் அரசு நடத்திய திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தார். 3 ஆண்டுகள் பயின்று 1984-ல் ஒளிப்பதிவாளருக்கான பட்டம் பெற்றார்.

46 படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியபின், 1990-ல் முதல் ஒளிப்பதிவாளராக உயர்ந்தவர். ‘காதல் கோட்டை’, ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘காலமெல்லாம் காதல் வாழ்க’, ‘மறுமலர்ச்சி’ உள்பட பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

ஒளிப்பதிவில் மிகப்புகழ் பெற்று விளங்கினாலும், அடிப்படையில் ஓர் எழுத்தாளர். ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘அம்மாவின் கைபேசி’ ஆகிய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதினார். அவருடைய சிறுகதைகள், ‘வெள்ளை மாடு’, ‘கொடிமுந்திரி’, ‘இசைக்காத இசைத்தட்டு’, ‘தங்கர்பச்சான் கதைகள்’ ஆகிய 4 புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவலுக்கு, தமிழக அரசு சிறந்த நாவலுக்கான பரிசை வழங்கியது. ‘அக்னி அக்சரா’, ‘திருப்பூர் தமிழ்ச்சங்கம்’ ஆகிய அமைப்புகளும் இந்த நாவலை ‘சிறந்த நாவல்’ என்று தேர்ந்தெடுத்து பரிசு வழங்கின.

தன்னுடைய நாவல்கள், சிறுகதைகளை அவரே இயக்கிப்படமாக்கினார். அவற்றில் முக்கியமானவை: அழகி(2002), பள்ளிக்கூடம் (2007), ஒன்பது ரூபாய் நோட்டு (2007), அம்மாவின் கைபேசி(2012).

பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி ஆகியோர் நடித்த ‘அழகி’ படம், ஒரு திரைக்காவியம் என்ற புகழ் பெற்றது.

பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோர் நடித்து தங்கர் பச்சான் இயக்கியுள்ள ‘களவாடிய பொழுதுகள்’, விரைவில் வெளிவர இருக்கிறது.

தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, சிறந்த இயக்குனருக்கான ராஜா சாண்டோ விருது, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது உள்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.

நாளை பரிசளிப்பு விழா

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் சி.பா.ஆதித்தனாரின் 111-வது பிறந்தநாள் விழா இலக்கியப் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன் விழாவுக்கு தலைமை தாங்கி விருது மற்றும் இலக்கியப் பரிசுகளை வழங்குகிறார். 

மூலக்கதை