தணிக்கை சான்றிதழ் தாமதம்.. நீதிமன்றத்தை நாடும் “ஜன நாயகன்” படக்குழு

  தினத்தந்தி
தணிக்கை சான்றிதழ் தாமதம்.. நீதிமன்றத்தை நாடும் “ஜன நாயகன்” படக்குழு

சென்னை, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது. ‘ஜனநாயகன்’ படத்தின் முன்பதிவு வெளிநாடு, மற்ற மாநிலங்களில் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19ம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு சில காட்சிகளை நீக்கக் கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படக்குழு அந்த காட்சிகளை நீக்கி மறு தணிக்கைக்கு அனுப்பியது. ‘ஜனநாயகன்’ வரும் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் படக்குழு நீதிமன்றத்தை நாட ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், அரசியல் உள்நோக்கத்தோடு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கத் தடை ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை