கோவை சம்பவம்: யாருக்கும் நடக்கக் கூடாத கொடூரம்;துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

  தினத்தந்தி
கோவை சம்பவம்: யாருக்கும் நடக்கக் கூடாத கொடூரம்;துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவை, கோவையில் கல்லூரி மாணவி கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சிபி ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: - எந்த பெண்ணுக்கும் நடக்ககூடாத கொடூரம் கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன். பாதித்த மாணவி, அவரது குடும்பத்துக்கு நம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.கோவையில் நடந்த கொடூரம்கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி, முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்றார். இவர் கோவையில் ஆட்டோமொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயது வாலிபரை காதலித்து வந்தார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு மாணவியும், அவரது காதலனும் காரில் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதிக்கு சென்றனர். இரவில் அங்கு காரை நிறுத்தி அதற்குள் அமர்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 11 மணியை கடந்த பின்னரும் அவர்கள் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் வாலிபரை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவா ளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), அவரது சகோதர் கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), அவர்களது உறவினரான குணா என்ற தவசி (20) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் கோவை இருகூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று மதுகுடித்து விட்டு 3 பேரும் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர். இருள்சூழ்ந்த இடத்தில் காதல் ஜோடி தனியாக காரில் இருப்பதை பார்த்து மிரட்டியுள்ளனர். பின்னர் காதலனை தாக்கி விட்டு மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடியபோது 3 பேரும் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கி இருந்தனர். போலீசார் சுற்றி வளைத்தபோது அரிவாளால் வெட்டி விட்டு அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். போலீசார் தற்காப்புக்காக அவர்கள் காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மூலக்கதை