இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் பலியான சம்பவம்: மத்திய சுகாதார செயலாளர் அவசர ஆலோசனை

ஜெய்ப்பூர், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார மைய டாக்டர் பரிந்துரைத்த இருமல் மருந்தை சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. மேலும் 10 பேர் பாதிப்பு அடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமானது. மாநில அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்ட கேசன்ஸ் பார்மா என்ற மருந்து நிறுவனம் தயாரித்து வழங்கிய இருமல் மருந்து (டெக்ட்ரோமெத்தார்பன்) பாதுகாப்பானதாக இல்லை என்று கூறப்பட்டது. இந்த மருந்தை சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால் அதுகுறித்து தீவிர விசாரணைக்கு முதல்-மந்திரி பஜன்லால் சர்மா உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ஒரு குழு அமைக்கப்பட்டு இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மறுபுறம் அந்த நிறுவனத்தின் மருந்துகளும் ஆய்வுப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அரசு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியான ராஜாராம் சர்மா, மருந்தின் தரத்தை கண்காணிக்க தவறியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.மேலும் சுகாதார துறையால் ஒப்பந்தம் வழங்கப்பட்ட கேசன்ஸ் பார்மா நிறுவனம் தயாரித்து வழங்கிய இருமல் சிரப் மருந்து உள்பட, அந்த நிறுவனம் தயாரித்த 19 வகை மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. அந்த மருந்துகளின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது. “கேசன்ஸ் பார்மா நிறுவனம் 2012 முதல் தயாரித்த மருந்துகளின் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டதாகவும், அப்போது 42 மாதிரிகள் தரம் குறைந்தவை என்று முடிவுகள் கிடைத்ததாகவும், இதையடுத்து அந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும்” மாநில மருந்து சேவைக் கழகம் அறிவித்து உள்ளது. அந்த இருமல் மருந்து 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஆபத்தானது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இருமல் மருந்தால் ராஜஸ்தான் மட்டுமல்லாது, மத்திய பிரதேசத்திலும் 9 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து கேரளாவில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று கூறுகையில், ‘கோல்ட்ரிப் இருமல் மருந்தில் பிரச்சினைகள் இருப்பதாக பிற மாநிலங்களிலிருந்து வந்த செய்திகளைத் தொடர்ந்து அந்த இருமல் சிரப் விற்பனையை மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை நிறுத்தி வைத்துள்ளது.” என்றார். இந்நிலையில் ம.பி., ராஜஸ்தானில் இருமல் மருந்து உட்கொண்ட 14 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக, மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய சுகாதார செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். காணொலி காட்சி மூலம் இந்த சுகாதார செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் இருமல் மருந்துகளின் தரம் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலக்கதை
