சபரிமலையில் தங்க தகடுகள் மாயமான விவகாரம்: தேவஸ்தான தலைவர் பரபரப்பு அறிக்கை

  தினத்தந்தி
சபரிமலையில் தங்க தகடுகள் மாயமான விவகாரம்: தேவஸ்தான தலைவர் பரபரப்பு அறிக்கை

சபரிமலை,சபரிமலையில் துவார பாலகர் சாமி சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பிய போது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து 3 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க தேவஸ்தான லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பாதுகாப்பு தலைமை அதிகாரிக்கு கேரள கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சபரிமலையில் துவார பாலகர் சாமி சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்கும் பணிக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது. திருவாபரணம் ஆணையரின் தலைமையில், தேவசம் லஞ்ச ஒழிப்பு துறை, சபரிமலை நிர்வாக அதிகாரி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் தேவசம் தங்க கொல்லர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான வாகனத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 12 சிற்பங்களின் தகடுகள் மொத்த எடை 24 கிலோ. இதில் 281 கிராம் தங்கம் இருந்தது. சென்னையில் உள்ள நிறுவனத்தில் புதுப்பிக்கும் பணி செய்த போது 10 கிராம் தங்கம் புதிதாக முலாம் பூசப்பட்டது. பின்னர், தங்க தகடுகளை சன்னிதானத்திற்கு கொண்டு வந்தபோது தகடுகளில் இருந்த தங்கத்தின் எடை 10 கிராம் அதிகரித்து மொத்தம் 291 கிராமாக இருந்தது. இந்த விஷயத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு மறைக்கவோ, மறுக்கவோ எதுவும் இல்லை. அதனால்தான் இந்த விஷயத்தில் விரிவான விசாரணை நடத்த தேவசம்போர்டு ஐகோர்ட்டை கோருகிறது. யாராவது தவறு செய்திருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இருப்பினும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் சபரிமலை கோவிலின் புனிதத்தன்மை தாக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை