மணிப்பூர் வன்முறையில் கடுமையாக பாதிக்கப்பட்ட சுராசந்த்பூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தபால் சேவை தொடக்கம்

இம்பால், மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே 2023 முதல் நடந்து வரும் மோதலில் இதுவரை 260 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தும், இதர பாதிப்புகளையும் சந்தித்து உள்ளனர். கலவரம் வெடித்த 3 ஆண்டுகளுக்குப் பின்பும், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. பிரதமர் மோடி கடந்த மாதம் 13-ந்தேதி மணிப்பூர் பயணம் சென்று இருதரப்பு மக்களையும் சந்தித்து பேசி வன்முறையை கைவிட வலியுறுத்தினார். இந்த நிலையில் மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தபால் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையின்போது சுராசந்த்பூர் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அங்கு அமைதியை திரும்ப கொண்டு வர அரசு சார்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அங்கு தபால் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தபால் சேவை இயங்காததால், தற்போது அங்கு ஏராளமான கடிதங்கள், பார்சல்கள் உள்ளிட்டவை தேங்கிக் கிடப்பதாக தபால் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலக்கதை
