காசோலையை எழுத்துப்பிழையுடன் நிரப்பிய அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

  தினத்தந்தி
காசோலையை எழுத்துப்பிழையுடன் நிரப்பிய அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

சிம்லா,இமாச்சலப்பிரதேசம் சிர்மவுர் மாவட்டம் ரோஹ்நத் பகுதியில் அரசுப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் டிராயிங் (Drawing - வரைதல்) ஆசிரியராக அட்டர் சிங் பணியாற்றி வந்தார். இதனிடையே, அட்டர் சிங் கையெழுத்திட்ட வங்கி காசோலை கடந்த 25ம் தேதி பள்ளி நிர்வாகத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த காசோலையின் மதிப்பு 7 ஆயிரத்து 616 ரூபாய் ஆகும். அதேவேளை காசோலையில் 7 ஆயிரத்து 616 ரூபாய் என ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்டிருந்தது. அதன்படி, Seven Thousand Six Hundred Sixteen என எழுதுவதற்கு பதிலாக Saven Thursday Six Harendra Sixtey என எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்டிருந்தது. இந்த காசோலையின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இந்த பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களின் கல்வித்தரம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், விசாரணையில் காசோலையை எழுத்துப்பிழையுடன் நிரப்பியது ஆசிரியர் அட்டர் சிங் என்பது உறுதியானது. இதையடுத்து அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மூலக்கதை