கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? கே.சி.வேணுகோபால் பதில்

  தினத்தந்தி
கர்நாடகத்தில் முதல்மந்திரி மாற்றப்படுவாரா? கே.சி.வேணுகோபால் பதில்

பெங்களூருஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று பெங்களூருவுக்கு வந்தார். அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-முதல்-மந்திரியாக யாரை நியமிக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் மேலிடமே முடிவு செய்யும். கட்சிக்குள் நடக்கும் விஷயங்கள் அனைத்துக்கும் கட்சி மேலிடமே நடவடிக்கையும், முடிவும் எடுக்கும். அதற்கான அனைத்து தகுதிகளும் கட்சி மேலிடத்துக்கு தான் உள்ளது. முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தால், அதை கட்சி மேலிடம் பார்த்துக் கொள்ளும். அதனால் அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நான் இங்கு வரும்போதெல்லாம் முதல்-மந்திரியாக சித்தராமையா 5 ஆண்டுகளும் நீடிப்பாரா? அல்லது இரண்டரை ஆண்டுகளில் முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? என்று தான் கேட்கிறார்கள். கட்சி தலைமை மாற்றம் குறித்தும், முதல்-மந்திரி மாற்றம் குறித்தும் கட்சி மேலிடமே பார்த்துக் கொள்ளும். குனிகல் தொகுதி எம்.எல்.ஏ. ரங்கநாத் மற்றும் மண்டியா முன்னாள் எம்.பி. சிவராமேகவுடா ஆகியோர் டி.கே.சிவக்குமாருக்கு உடனடியாக முதல்-மந்திரி பதவி வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து ஆகும்.ஆனால் கட்சி தலைமை மாற்றம், முதல்-மந்திரி மாற்றம் குறித்த யூகங்கள் அனைத்தும் பொய்யானவை. அதுபோல் ஏதேனும் மாற்றம் தேவை என்றால், அந்த சந்தர்ப்பத்தில் கட்சி மேலிடம் தேவையான முடிவை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை