சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய காட்டு யானை

  தினத்தந்தி
சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய காட்டு யானை

பெங்களூரு,கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனச்சரணாலயம் உள்ளது. இங்குள்ள வனவிலங்குகளை அதன் வாழ்விடத்திலேயே கண்டு ரசிக்கும் வகையில் வனத்துறை சார்பில் வாகன சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தசரா விடுமுறை என்பதால் ஏராளமான பொதுமக்கள் பந்திப்பூர் வனச்சரணாலயத்தில் வனவிலங்குகளை கண்டு ரசிக்க வந்திருந்தனர். அவர்களில் சிலர் சவாரி சென்றும் வனவிலங்குகளை பார்வையிட்டனர். அதுபோல் ஒரு குழுவினர் வனத்துறை வாகனத்தில் வனவிலங்குகளை நேரில் பார்வையிட சென்றனர். அந்த சமயத்தில் 2 காட்டு யானைகள் சாலையில் வந்து நின்றது. இதை கவனித்த டிரைவர், அந்த சவாரி வாகனத்தை மெதுவாக ஓட்டி வந்து யானை அருகில் நிறுத்தினார். அப்போது திடீரென்று ஒரு யானை மிரண்டு, சவாரி வாகனத்தை தாக்க ஓடியது. இதை பார்த்து சுதாரித்துக்கொண்ட டிரைவர், சவாரி வாகனத்தை பின்னோக்கி இயக்கினார். இதனால் அந்த வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் அச்சத்தில் அலறினர். இதற்கிடையே யானை திடீரென நின்று திரும்பி சென்று விட்டது. இதனால் அந்த வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த சம்பவத்தை மற்றொரு வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது.

மூலக்கதை