7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற ஆசாமி - பரபரப்பு தகவல்கள்

மும்பை,மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி சம்பவத்தன்று விளையாடுவதற்காக வெளியே சென்றாள். சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பயந்துபோன குடும்பத்தினர் அருகில் உள்ள இடங்களுக்கு சென்று தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கடந்த புதன்கிழமை சிறுமி விளையாடுவதற்காக எடுத்து சென்ற வாளி பக்கத்து வீட்டு வாசலில் கிடந்ததை கவனித்த போலீசார் சந்தேகத்தின்பேரில் பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இதில் சிறுமி சாக்குப்பையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது ெதரியவந்தது. இதனைதொடர்ந்து கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரான 33 வயது வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அவர் பீகார் மாநிலம் மதுபனிக்கு தப்பி செல்ல இருந்தது தெரியவந்தது, இதையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு வாலிபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த நபர் 2023-ம் ஆண்டு இதேபோல 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தானே மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாகவும், விசாரணைக்காக அவர் கோர்ட்டுக்கு அழைத்து சென்றபோது போலீஸ் காவலில் இருந்து தப்பியதும் தெரியவந்தது. இந்தநிலையில் அந்த ஆசாமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலக்கதை
