கோவாவில் தன் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு அனுப்புகிறது காங்கிரஸ்: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

பனாஜி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கோவாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக அவர் நேற்று கோவாவுக்கு சென்றார். அவருடன் கட்சியின் கோவா பொறுப்பாளர் மற்றும் முன்னாள் டெல்லி முதல்-மந்திரியான அதிஷியும் சென்றார். அவர் நேற்று கூறும்போது, சட்டவிரோத கட்டுமானம், சட்டவிரோத சுரங்கம் தோண்டுதல், ஊழல், வன்முறை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக குற்ற விகிதம், குண்டும் குழியும் நிறைந்த சாலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சுற்றுலாவாசிகளின் வருகை சரிவு ஆகியவற்றை கோவா கடந்த 13 ஆண்டுகளாக கண்டுள்ளது என குற்றச்சாட்டாக கூறினார். இந்நிலையில் அவர் கோவாவில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர், கோவாவில் எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் கட்சியுடன் எந்தவித கூட்டணியும் கிடையாது என கூறினார். அக்கட்சி கோவா மக்களை அதிகளவில் ஏமாற்றியுள்ளது. 2017 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், காங்கிரசின் 13 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். 2022-ம் ஆண்டில், பா.ஜ.க.வில் கூடுதலாக 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணையமாட்டார்கள் என அவர்களால் உறுதியளிக்க முடியுமா? என அவர் அப்போது கேள்வி எழுப்பினார். பா.ஜ.க.வுக்கு ஒட்டுமொத்த அளவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை அனுப்புகிறது என அவர் குற்றச்சாட்டாகவும் கூறினார். கோவாவில் பா.ஜ.க. அரசு அமைக்க உதவுவதற்கு நாங்கள் ஒரு பகுதியாக இருக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
மூலக்கதை
