வேளாண் பல்கலைக்கழகங்களில் 20 சதவீத இடங்கள் ‘கியூட்’ தேர்வு மூலம் நிரப்பப்படும் - மத்திய மந்திரி அறிவிப்பு

  தினத்தந்தி
வேளாண் பல்கலைக்கழகங்களில் 20 சதவீத இடங்கள் ‘கியூட்’ தேர்வு மூலம் நிரப்பப்படும்  மத்திய மந்திரி அறிவிப்பு

புதுடெல்லி, வேளாண்மை சார்ந்த படிப்புகளை பயிற்றுவிக்க நாட்டில் 3 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட 71 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களில் அனைத்து மாநிலங்களின் மாணவர்களும் படிப்பதில் சிரமங்கள் இருந்தன. ஏனென்றால் மாநில பல்கலைக்கழகங்களில் சேர்க்கை விதிகளில் மாறுபாடுகள் இருந்தது. குறிப்பாக 12-ம் வகுப்பில் குறிப்பிட்ட பாடங்களை மாணவர்கள் படித்திருக்க வேண்டும் என்ற விதி வேறுபாடாக இருந்தது. இது தவிர சேர்க்கையிலும் பல ‘கெடுபிடி’கள் இருந்தன. இந்த குறைகளை பல மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மத்திய வேளாண் மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மந்திரி உத்தரவின்பேரில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் விதமான இந்த திருத்த நடவடிக்கை குறித்த அறிவிப்பை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது, வேளாண் பல்கலைக்கழகங்களில் 20 சதவீத இளங்கலை இடங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் (2025-2026) அகில இந்திய போட்டித்தேர்வான ‘கியூட்’ தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘ஒரு நாடு, ஒரு விவசாயம், ஒரு குழு’ என்ற கொள்கையின்படி, இந்த தேர்வை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து நடத்தும் என வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 12-ம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் அல்லது வேளாண்மை பாடங்களைப் படித்த மாணவர்கள் ‘கியூட்-ஐ.சி.ஏ.ஆர்.’ தேசிய நுழைவுத்தேர்வின் மூலம் 20 சதவீத இடங்களில் சேர்க்கை பெறலாம். மத்திய அரசின் இந்த முடிவின் மூலம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை எளிமைப்படுத்தப்பட்டு சீரானதாக மாறும் என்று மந்திரி கூறினார். இந்த சேர்க்கையில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் பயன் அடைவார்கள் என தெரியவந்துள்ளது.

மூலக்கதை