தோழியுடன் ஓட்டலில் தங்கிய கள்ளக்காதலன்... பெண் எடுத்த விபரீத முடிவு

  தினத்தந்தி
தோழியுடன் ஓட்டலில் தங்கிய கள்ளக்காதலன்... பெண் எடுத்த விபரீத முடிவு

பெங்களூரு,கர்நாடக மாநிலம் பெங்களூரு மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் யசோதா. இவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஆடிட்டரான விஸ்வநாத் என்பவருக்கும், யசோதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 9 ஆண்டுகளாக கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். மேலும் பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றித்திரிந்து வந்துள்ளனர். இதையடுத்து யசோதா தனது தோழியான பிரியங்கா என்பவரை விஸ்வநாத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்பு பிரியங்காவும், விஸ்வநாத்தும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி, யசோதாவுக்கு தெரியாமல் பேசி வந்தனர். பின்னர் விஸ்வநாத்துக்கும், பிரியங்காவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து விஸ்வநாத், யசோதாவிடம் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த யசோதா தனது தோழி பிரியங்கா மற்றும் விஸ்வநாத்தின் நடவடிக்கைகளை கவனித்து பிரியங்காவின் நட்பை கைவிட கூறி விஸ்வநாத்திடம் சண்டையிட்டு வந்தார். இந்த நிலையில் விஸ்வநாத்தும், பிரியங்காவும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இதனை அறிந்த யசோதா அந்த ஓட்டலுக்கு சென்று அவர்கள் இருவரிடமும் பயங்கரமாக சண்டையிட்டு உள்ளார். பிரியங்காவிடம் இதுபற்றி கேட்டதற்கு அவரும் சரியான பதில் சொல்லாததால், கோபமடைந்த யசோதா இருவரையும் விடுதியில் வைத்து தாக்கியுள்ளார். பின்னர் அருகில் இருந்த மற்றொரு அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிய யசோதா அங்கிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாகடி ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் யசோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விஸ்வநாத் மற்றும் பிரியங்காவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை