நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்சில் சிக்கி தவிக்கும் சிக்கமகளூரு மாணவி

  தினத்தந்தி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்சில் சிக்கி தவிக்கும் சிக்கமகளூரு மாணவி

பெங்களூரு,கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் செபு தீவில் மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளியாக பதிவாகி உள்ளது. இந்த நில நடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதன்காரணமாக 70 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 150 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலநடுக்கத்தால் சிக்கமகளூரு மாணவி ஐஸ்வர்யா அங்கு சிக்கி தவித்து வருகிறார். அவர் உள்பட கர்நாடகம், கேரளா, ஆந்திரா, தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 50-60 மாணவர்கள் உணவு, தண்ணீர், தங்குமிடம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். அதாவது இந்தியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் நிலநடுக்கத்தால் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள். சிக்கமகளூரு மாணவி ஐஸ்வர்யா, 5 ஆண்டுகள் மருத்துவ படிப்பை முடித்து சொந்த நாட்டுக்கு திரும்பி வர இருந்தார். இந்த சமயத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு அங்கு தங்க இடம் இன்றியும், உண்ண உணவு இன்றியும் தவித்து வருகிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அவரது பெற்றோர், மகளை தொடர்புகொள்ள முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். இதன்காரணமாக அவர்கள் தங்கள் மகளை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பிலிப்பைன்சின் செபு தீவில் சிக்கி உள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மூலக்கதை