திமுக ஆட்சியில் ரூ.5 ஆயிரம் கோடி கோயில் சொத்துகள் மீட்பு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  தினமலர்
திமுக ஆட்சியில் ரூ.5 ஆயிரம் கோடி கோயில் சொத்துகள் மீட்பு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ''திமுக ஆட்சியில் 1,400க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன; ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகளை மீட்டுள்ளோம்'' என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.மயிலை கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகம் முழுவதும் சுற்றினாலும், கொளத்தூர் வந்தால் எழுச்சியும், மகிழ்ச்சியும், புது எனர்ஜியும் ஏற்படுகிறது. முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மாற்றி வருகிறோம். சுயநலத்தால் சொல்வதாக நினைக்க வேண்டாம். தமிழகத்தின் 234 தொகுதிகளும் என் தொகுதிகள் தான். அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்திலேயே பார்க்கிறேன். எந்த விருப்பு, வெறுப்பும் இன்றி எதிர்க்கட்சியினரின் தொகுதிகளுக்கும் முக்கியத்துவம் தந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தில் ஹிந்துசமய அறநிலையத்துறை சிறந்து விளங்கி வருகிறது. 3 ஆண்டு திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அறநிலையத்துறை சார்பில் செயல்படும் கல்லூரிகளில் இலவச கல்வி தரப்படுகிறது. திமுக ஆட்சியில் 1,400க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன; ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகளை மீட்டுள்ளோம். அறிவுத்துறைகோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் துவங்கியுள்ளோம். இறைப் பணியோடு சேர்த்து கல்விப் பணியும் செய்து வருகிறோம். அறநிலையத்துறையாக மட்டுமல்லாமல் அறிவு துறையாகவும் செயல்பட்டு வருகிறது. கல்வி தான் ஒருவரிடம் இருந்து திருட முடியாத சொத்து. அனைத்து திறமைகளையும் கொண்டவர்களாக மாணவர்கள் வரவேண்டும்; விளையாட்டு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை