சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படியென்ன முக்கியத்துவம் இந்த திருவிழாவில்?

 

பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழாக்கள் உள்ளதுபோல, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்களும் உண்டு..

 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கீழக்குறிச்சிப்பட்டியில் 02/04/2024 அன்று ஒரு விநோதத் திருவிழா நடந்துள்ளது. இந்தக் கிராமத்தில், பொன்னழகி அம்மன் கோயில் ஒன்று பழமையானது. இந்தக் கோயிலில் வருடந்தோறும் திருவிழா நடைபெறும்.

 

பங்குனித் திருவிழாவையொட்டி, கோயிலிலுள்ள பொன்னழகி அம்மனுக்கு ஆடு, சேவல் பலியிட்டுப் பொங்கல் வைப்பது வழக்கம். அதன்படியே, இப்போதும் பக்தர்கள், ஆடு, சேவல் பலியிட்டு நேர்த்திக்கடன்களைச் செலுத்தினார்கள்..

 

தலையில் கோழி இறகு

 

இந்தத் திருவிழாவில் ஹைலைட்டே சேறு பூசும் நிகழ்வுதான். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே கண்மாய் ஒன்று உள்ளது. இந்த கண்மாயில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேற்றில் புரண்டு உடம்பில் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்..

 

பிறகு, மாலை அணிந்து தலையில் கோழி இறகையும் வைத்துக் கொண்டு, சாமியாடுவார்கள். கண்மாயிலிருந்து கோயில் வரை ஆடிக்கொண்டே வருவார்கள். பிறகு, சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும்.

 

இந்த திருவிழாவில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு உடலில் சேறுபூசி, தலையில் கோழி இறகு வைத்து ஆடினார்கள்.

 

இதற்குக் காரணம், சேற்றினை உடலில் பூசிக்கொள்வதால், உடல் ஆரோக்கியம் கிடைக்கும். அத்துடன், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்ல, இப்படிக் கோழி இறகினைத் தலையில் வைத்து வழிபடுவதால் குடும்ப உறவுகள் தழைக்குமாம். நினைத்த காரியங்களும் கைகூடும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

மூலக்கதை