குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

எழுத்தாளர் சோம.வீரப்பன் எழுதிய `திருக்குறளில் மேலாண்மை' தொடர்பான ‘தி ஆர்ட் ஆஃப் ஜாகிங் வித் யுவர் பாஸ்’ (The art of jogging with your boss) என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி பெல் கைலாசபுரம் டவுன்ஷிப் மனமகிழ் மன்றத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

 

‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை, பெல் நிறுவன பொது மேலாளர் ஐ.கமலக்கண்ணன் வெளியிட்டுப் பேசினார். முதல் பிரதியை பெற்றுக்கொண்ட பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் மஃப்ரூஜா சுல்தானா, இந்த நூலை வங்காள மொழியில் மொழிபெயர்க்கத் தங்களது நிறுவனத்தின் இயக்குநர் பர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

 

நூல் ஆசிரியர் `குறள் இனிது' சோம.வீரப்பன் பேசும்போது, ‘‘இந்த நூல் விரைவில் இந்தி, பஞ்சாபி, ஒரியா ஆகிய மொழிகளிலும் வெளிவர உள்ளது. மேலைநாட்டு மேலாண்மை வல்லுநர்களையே கொண்டாடும் நாம், நமது திருவள்ளுவர் உலகின் மூத்த மேலாண்மை குரு என்பதை மறந்துவிடுகிறோம். திருக்குறளை மேலாண்மை பாடத் திட்டத்தில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.

 

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக முதன்மையர் பத்ரிநாத், ஹரிஹர் அலாய்ஸ் நிறுவனத்தின் திருநாவுக்கரசு, ஹைடெக் நிறுவனத்தின் முத்தையா, கரூர் திருவள்ளுவர் கல்லூரியின் செங்குட்டுவன், பெல்நிறுவன பொது மேலாளர் மகேந்திரன், நூல் குடில் பதிப்பகத்தின் மெய்யப்பன், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மைக்கேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக ராமநாதன் வரவேற்றார்.

 

இந்த நூலை 150 பிரதிநிதிகளுக்கு முன்பதிவு செய்திருந்த கவின்கேர் நிறுவனத்தின் சார்பில், அதன் விற்பனை அலுவலர் பிரபாகர் நூலைப் பெற்றுக் கொண்டார்.

 

160 பக்கங்களைக் கொண்டு,`இந்து தமிழ் திசை' வெளியீடான இந்த நூலின் விலை ரூ.250.

 

 

நன்றி - ,`இந்து தமிழ் திசை'

மூலக்கதை