"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

வணக்கம், 

 

தவத்திரு தனி நாயகம் அடிகளார் அவர்கள் உலகு தழுவிய தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை 1964-ஆம் ஆண்டு நிறுவி ஒரு வலுவான தேவையை அறிந்து, இலக்கை நிர்ணயித்து செயல்பாடுகளை வகுத்தார். 

 

இம்மன்றம் கீழ்க்காணும் நோக்கங்களைக் கொண்டிருந்தது; 

1. உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், 

2. தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், 

3. பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்களைத் தமிழாராய்ச்சியில் ஈடுபடச் செய்தல், 

4. தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைக்கழகத் தொடர்புகளை ஏற்படுத்துதல்  

 

இதற்காக உலகிலுள்ள அறிஞர் பலரை ஒன்று சேர்த்து, அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் இரண்டாண்டுகட்கு ஒருமுறை "உலகத் தமிழ் மாநாடு' நடத்த இம்மன்றம் முடிவு செய்து, மாநாடு நடத்தவிரும்பும் நாடுகள் இம்மன்றத்தின் ஒத்துழைப்புடன் மாநாடுகளைச் சிறப்புற நடத்த வழி செய்தது. இம்மன்றத்தின் முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடத்தப்பெற்றது. அதை அடுத்து, கோலாலம்பூரில் மூன்று மாநாடுகளும், சென்னை, பாரீசு, ஜாஃப்னா, மதுரை மரூசியசு, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் என ஒன்பது மாநாடுகள் நடத்தப்பட்டன. பத்தாவது மாநாடு சிகாகோவில் நடைபெற்றது. 

 

இதன்பிறகு இரண்டு மூன்று அணிகளாகப் பிரிந்து இந்த அமைப்பின் நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது. என்னைப்போன்ற இளையவர்கள், ஆர்வலர்களுக்குக் கடந்தகால மாநாடுகள் குறித்த நேரடி அனுபவம், இல்லையாயினும், சிகாகோவில் நடந்த மாநாட்டில் நேரடியாக கலந்துகொண்டு பயணித்தவகையில், கடந்தகால மாநாடுகள் வரலாறுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி பதாகை வைத்து உள்வாங்கிய வகையில், செய்தியாளர்களைச் சந்திக்கும் பொறுப்பேற்று பல்வேறு சவாலான கேள்விகளை எதிர்கொண்டு அமெரிக்க விசா கிடைக்காமை, மாநாட்டுக்கு வாக்களித்தபடி நிதி ஒதுக்குவதில் ஏற்பட்ட காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு , தமிழ்நாட்டு அமைச்சரவையுடன் , பேரவை, IATR ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்ட வகையில், அமெரிக்கவாழ் தமிழராக, ஒரு ஊடகவியலாளராக மாநாடு குறித்து நல்ல புரிதலை ஏற்படுத்தி மாநாட்டைப்பற்றி ஊடகங்கள் கடைசி நேரத்தில் சிறப்பாக எழுத நண்பர் ஆழி செந்தில்நாதன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து எடுத்த முயற்சியின் அடிப்படையில் இவ்வமைப்பின் தொடர் செயல்பாடு தவத்திரு தனி நாயகம் அடிகளார் அவர்களின் கருத்தை ஒட்டி தொடரவேண்டும் என்ற பொறுப்புணர்வில் எழுதுகிறேன். 

 

மேலும் இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் ,புலம்பெயர் சமூகத்தின் வளர்ச்சியை உள்ளடக்கி விரவாகவேண்டும் வளரவேண்டும் என்று எங்களைப்போன்றவர்களது விருப்பத்தின் அடிப்படையில் எழுதுகிறேன். மேலும், 10வது மாநாடு நடப்பதற்கு முன்பு இவ்வமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக இணைந்து முடிந்த தொண்டாற்றவேண்டும் என்ற நோக்கில் பயணித்தது மற்றொரு காரணம். 

 

கடந்த சில மாநாடுகள் ஆய்வுத்தரத்தில் நடைபெற்றதா? வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடைபெற்றதா? இவ்வமைப்புக்கு வங்கிக்கணக்கு கூடாது என்று ஆரம்பக்கட்டத்தில் தனி நாயகம் அடிகளார் சிந்தித்தாரா? தமிழ்நாட்டிலிருந்து இல்லாமல் வெளிநாடு சார்ந்த ஆராய்ச்சி உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் தலைவராக இருக்கவேண்டும் என்று சிந்தித்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தொடர்ந்து பலரும் வைத்தாலும், அவைகளைப் பேசித்தீர்த்து , முன்னிற்பவர்கள் விட்டுக்கொடுத்து நாம் முன்னோக்கி நகரவேண்டும் என்பது அவசியம் என்று கருதுகிறேன். பேசித் தீர்க்கமுடியாதது ஒன்றுமில்லை. 

 

எனவேதான் குழுக்கள் பிரிந்தபோது , போட்டி மாநாடுகள் நடத்தியபோது இரு அணியிலும் தெரிந்தவர்கள் இருந்தாலும் எதிலும் பயணிக்காமல் தள்ளி நின்றேன். என்னைப்போல் இளையோர் பலரும் எந்த குழுவின் மாநாடுகளிலும் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று கருதுகிறேன். பிரிந்து மாநாடு எடுத்தால் இனியும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது ஐயமே. தமிழ் அமைப்புகளில் கருத்து முரண்கள் வருவதில் தவறில்லை, ஆனால் அவை அவ்வப்போது உரியவர்களைக் கொண்டு சரிசெய்யப்பட்டு , விட்டுக்கொடுத்து, தனி மனிதர்களை முன்னிறுத்தாமல், கடந்தகால வரலாற்றை முன்னிறுத்தி அடுத்தகட்டப் பயணம் தடைப்பட்டுவிடாமல் , வரலாறு தொடரவேண்டும். 

 

இதை நாம் உருவாக்கவில்லை. எனவே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, இதில் ஏதும் நுண்ணரசியல் இருந்தால் அதை முறையாக ஆராய்ந்து , பொது ஆளுமைகளைக்கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு "உலகத் தமிழ் மாநாடு" தொடரவேண்டும் . பல நேரங்களில் ஆய்வாளர்கள் ஒரு அமைப்பை நிர்வாகம் செய்யப் போதிய ஆற்றல் உடையவர்களாக, தலைமைப்பண்பு கொண்டவர்களாக இருப்பதில்லை. அதுவும் இதுபோன்ற குழப்பங்களுக்குக் காரணமாக இருக்கலாம். ஆராய்ச்சி வேறு, தலைமைப்பண்பு வேறு. இரண்டும் அமைவது தனி நாயகம் அடிகளார் போன்றோருக்கே சாத்தியம். அதனாலேயே ஒரு கருத்தை உருவாக்கி இத்தனை ஆண்டுகள் அதை நிலைபெற வைக்க முடிந்துள்ளது. இன்றைய காலக்கட்டச் சூழலை உள்வாங்கி பொதுநல நோக்கம் கொண்டவர்களை உள்ளடக்கிய ஒரு குழு வெளிநாட்டுத் தமிழறிஞர் ஒருவரைத் தலைவராகக் கொண்டு அனைவரும் அதை ஏற்று பயணம் தொடரவேண்டும் என்பது என் போன்றவர்களின் விருப்பம். 

 

ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகமும் இன்று பிரிந்துள்ள அமைப்புகளை அதன் பயணத்தை , அவர்கள் விடும் அறிக்கைகளைக் கூர்ந்து பார்த்துவருகிறது. மவுனமாக இருப்பதால் எதையும் உள்வாங்கவில்லை என்று பொருளல்ல. அனைவரும் கவலையோடு கவனிக்கிறார்கள். இவ்வமைப்பின் வரலாறு நெடியது. இதில் பிரிந்து நிற்பவர்களும் அன்பிற்குரியவர்கள், பெரியவர்கள். அவர்களைக்குறித்தும் , அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கவலை கொண்டுள்ளார்கள். 

 

இவ்வமைப்பு மீண்டும் வெளிநாட்டுத் தமிழ் ஆராய்ச்சியாளர் ஒருவரைத் தலைவராகக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வெளியே உலகத் தரத்தில் இயங்கவேண்டும். தமிழ்நாட்டு அரசின் ஒத்துழைப்பை, இந்திய அரசின் ஒத்துழைப்பை, பிற நாடுகளின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து கேட்டுப்பெறவேண்டும் என்பது அனைவரின் விருப்பம். தமிழ்நாடு அரசு தனி நாயகம் அடிகளார் மாநாடு நடத்துகையில் அண்ணா துணைநின்றதுபோல் அண்ணாவின் வழியைப் பின்பற்றி இவ்வமைப்பு தொடர்ந்து உலக அரங்கில் முன்னெடுக்கும் மாநாடுகள் வெற்றிபெறக் கடந்தகாலங்களைப்போல் துணை நிற்கவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு. தமிழ் ஆராய்ச்சியைத் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுக்கவேண்டும் அதில் எவ்வித அரசியலும் கலந்துவிடாமல் தனித்த செயல்பாட்டுடன் இவ்வமைப்பு கடந்தகாலங்களைப்போல் செயல்படவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. 

 

இதுகுறித்து தனிமனித விமர்சனங்களோ, வேறு நோக்கங்களோ இல்லாமல் பொது விவாதங்கள் நடைபெறவேண்டும். தேவையானால் கடந்தகால வரலாற்றை அறிந்த பெரியோர்களைக்கொண்ட ஒரு குழு அமைந்து அவர்கள் சிகாகோ மாநாட்டினையும், அதன் முன்பும், அதன்பின் என்ன நடந்தது, அமைப்பு தொடர்ந்து ஆரம்பக்கால நோக்கோடு பயணிக்க எங்குத் தடம் புரண்டது, எப்படி அதைச் சரிசெய்வது என்று ஒருங்கிணைந்து நடுநிலைமையாக அனைத்துக் குழுவையும் அழைத்துப் பேசி சரிசெய்துகொள்ளவேண்டும் என்பது அனைவரின் விருப்பம். 

 

போட்டிக்குக்கள் மாநாடுகள் நடத்துவதால் அது வரலாற்றில் இடம்பெறாது, பெருமையும் அல்ல என்பதையும், எதிர்காலத் தலைமுறை நம் ஒற்றுமையின்மையை அறியும்போது இன்று கருத்துகளால் முன்னிற்கும் அனைவரும் அதற்குப் பொறுப்பாளி ஆவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் முன்னிற்கும் அனைவரும் ஏற்கனவே தனித்த பெருமையுடையவர்கள், அவர்கள் சேர்த்த புகழும், சமூக அங்கீகாரமும் இந்த வரலாற்று அமைப்பை ஒற்றுமையோடு விட்டுக்கொடுத்து பழைய நிலைக்குக் கொண்டுவருவதால் மேலும் உயர்வடையும்.  

 

கடந்தகால வரலாற்றை அறிந்த பெரியோர்களைக்கொண்ட ஒரு குழு உருவாகி , அதைப் பிரிந்து சென்றுள்ள குழுக்கள் ஏற்றுக்கொண்டு வெளிப்படையான விவாதம் நடந்து ஒரு தீர்வு ஏற்படவேண்டும். "ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே" என்ற நிலையில் ஒற்றுமையாகச் செயல்படத் தனிமனிதர்கள், குழுக்களின் கருத்துகளைப் பின்தள்ளி தவத்திரு தனி நாயகம் அடிகளார் தொடங்கிய நோக்கம் முன்னிறுத்தப்படவேண்டும்.

 

நடக்குமா? அப்படிப்பட்ட குழுக்களில் எவரெல்லாம் பங்கேற்கப் பொருத்தமானவர்கள்? அப்படி நடந்தால் குழுக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

 

எதிர்மறை கருத்துகளைத் தவிர்க்கவும். இதன் மேம்பட்ட வரலாற்றையும் முன்னோக்கி மட்டுமே சிந்திக்கவும்.

மூலக்கதை