மதுரைக்கான பெரியாறு கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு சோதனை மேல் சோதனை

தினமலர்  தினமலர்
மதுரைக்கான பெரியாறு கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு சோதனை மேல் சோதனை

மதுரை: மதுரை மாநகராட்சி மக்களுக்கு கிடைக்க வேண்டிய பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிப்பு, இணைப்பு பணிகளுக்காக பணியாற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையாட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் வினியோகப் பணிகள் மேலும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் உள்ள மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 371 எம்.எல்.டி., குடிநீர் தேவை. தற்போது வைகை அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் 192 எம்.எல்.டி., குடிநீர் மட்டும் பெறப்படுகிறது. பற்றாக்குறையை போக்க 'அம்ரூத் 3' திட்டத்தில் ரூ.1685.76 கோடியில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவித்து, பணிகள் முடியும் தருவாயில் இருந்தாலும் குடிநீர் வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது. இதற்கு சில காரணங்களை அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் நீரை பண்ணைப்பட்டியில் சுத்திகரித்து அங்கிருந்து மேல்நிலை தொட்டிகள் அமைத்து மதுரை வரை 55.44 கி.மீ., தொலைவுக்கு பிரதான குழாய்கள் வழியாக கொண்டு வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை வரும் நீரை வார்டு வாரியாக குழாய்கள் பதித்து தெருக்கள், வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.

இப்பணிகளை மூன்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகள் அதிகம் இருந்தாலும், மிகக் குறைவான பணியாளர்களே ஈடுபடுத்தப்படுவதால் உரிய நேரத்தில் முடிக்க முடியவில்லை.

இப்பணிகள் முடிந்த பின்புதான் சில பகுதிகளில் ரோடுகள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி துவக்க வேண்டியுள்ளது. இதனால் ரோடுகள் பணியும் தாமதமாகின்றன.

குழாய் பதிக்கிறேன் என்ற பெயரில் பல இடங்களில் எற்கனவே உள்ள குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புகளை உடைத்து விடுகின்றனர். அதையும் அவர்கள் சரிசெய்து தருவது தாமதமாகிறது. இப்படியே குறைவான எண்ணிக்கையில் பணியாளர்களை ஈடுபடுத்தினால் மீண்டும் மீண்டும் குடிநீர் வினியோகம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

கோடையில் பெரும் குடிநீர் தட்டுப்பாடும், சித்திரை திருவிழாவையொட்டி குவியும் ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும் ஈடுசெய்ய முடியாமல் போய்விடும். மேயர், கமிஷனர் இவ்விஷயத்தில் 'கறார்' நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றனர்.

மதுரை: மதுரை மாநகராட்சி மக்களுக்கு கிடைக்க வேண்டிய பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிப்பு, இணைப்பு பணிகளுக்காக பணியாற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையாட்கள்

மூலக்கதை