பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு... எப்போது மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்துமா?

தினமலர்  தினமலர்
பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு... எப்போது மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்துமா?

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் துவங்கியுள்ள சூழ்நிலையில் அனைத்து படிப்புகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி பல்கலைக்கழகம் 800 ஏக்கர் பரப்பளவில் 1985 ஆண்டு துவங்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பல்கலைக் கழகத்தில் 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த புதுச்சேரி மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வகையில், 25 சதவீத இடங்களை ஒதுக்க மாநில அரசு கேட்டுக்கொண்டது. பரிசீலித்த பல்கலைக்கழகம், புதுச்சேரியில் இல்லாத படிப்புகளில் 25 சதவீத இடங்களை வழங்க ஒப்புக் கொண்டு, 1997ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழகம் அசுர வளர்ச்சி கண்ட பிறகு, இட ஒதுக்கீடு முறை தற்போது தடம்புரண்டு விட்டது. பல்கலைக் கழகத்தில் 54 பாடப்பிரிவுகள் உள்ள நிலையில், 20 பாடப்பிரிவுகளில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.

மற்ற பாடபிரிவுகளில் இல்லை. குறிப்பாக, வேலைவாய்ப்பு அளிக்கும் மிக முக்கியமான பாடப்பிரிவுகளில் இந்த ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

இந்தாண்டு மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள சூழ்நிலையில் அனைத்து படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.மாநிலத்தில் தனி பல்கலைக்கழகம் இல்லை. உயர்கல்விக்கு பெரிதும் புதுச்சேரி பல் கலைக் கழகத்தினை சார்ந்துள்ளது.

ஆனால் கியூட் தேர்விற்கு பிறகு புதுச்சேரி மாணவர்களுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு இடம் கிடைப்பது சிக்கலாகி வருகின்றது.

புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையும் இன்றளவும் புரியாத புதிராகவே உள்ளது.இந்த குழப்பத்தை களைய, துணைவேந்தராக இருந்த தரீன் உத்தரவுபடி, பல்கலை இயக்குனர் ராமதாஸ், பேராசிரியர்கள் சம்பந்தம், பாலசுப்ரமணியம் ஆகியோர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த குழு ஆராய்ந்து. அனைத்து படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு பரிந்துரை செய்தது. ஆனாலும் பரிந்துரை அமல்படுத்தப்படவில்லை.

மற்ற மத்திய பல்கலைக் கழகங்களில் இந்த நடைமுறை இல்லை என கூறி இந்த பரிந்துரையின் மீது இறுதி முடிவும் எடுக்காமல் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே பல்கலைக்கழக அனைத்து உயர் படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 இட ஒதுக்கீடு கிடைக்காத சூழல் ஏற்பட்டு வருகின்றது.

புதுச்சேரி மாணவர்களின் நலன் கருதி ,மத்திய அரசுடன், மாநில அரசுடன் இணைந்து பேசி பல்கலைக்கழகத்தில் அனைத்து படிப்புகளிலும் 25 சதவீத இடங்களை பெற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர கியூட் தேர்வு எழுத வேண்டும்.இதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 27 ம்தேதியில் இருந்து https://exams.nta.ac.in/CUET-UG. என்ற இணையதளத்தில் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகின்றது. நான்காண்டு யூ.ஜி.,ஐந்தாண்டு பி.ஜி.,படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 26 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.



புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் துவங்கியுள்ள சூழ்நிலையில் அனைத்து படிப்புகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க

மூலக்கதை