ஆன்மிக சுற்றுலா திட்டங்களுக்கு வரைவு திட்டம்... தயார்; ரூ.105 கோடியில் கோவில்களை மேம்படுத்த முடிவு

தினமலர்  தினமலர்
ஆன்மிக சுற்றுலா திட்டங்களுக்கு வரைவு திட்டம்... தயார்; ரூ.105 கோடியில் கோவில்களை மேம்படுத்த முடிவு

புதுச்சேரி, : ஆன்மிக சுற்றுலா திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களை, 105 கோடி ரூபாயில் மேம்படுத்த விரிவாக திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அழகிய சுற்றுலா இடமாக புதுச்சேரி திகழ்கிறது. நீண்ட அழகிய கடற்கரை, வரலாற்று பன்முகத்தன்மை, பண்பட்ட கலாசாரம், பாரம்பரிய வண்ணமயமான கட்டடங்கள் ஆகியவை புதுச்சேரியின் தனித்துவமாக விளங்குகின்றன.

இன்றைக்கு போதைசேரியாக, கஞ்சாசேரியாக புதுச்சேரி விளங்கினாலும், அடிப்படையில் புதுச்சேரி இயல்பாக ஒரு ஆன்மிக பூமி. முன்னோர்களால் வேதபுரி என்றழைக்கப்பட்ட பெருமையை கொண்டது.

ஸ்ரீமத் குரு சித்தானந்தர், வண்ணாரப் பரதேசி, சக்திவேல் பரமானந்தா, உள்பட 50க்கும் மேற்பட்ட சித்தர்கள் இங்கே ஜீவ சமாதிகளாகி உள்ளனர்.

புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பிற மாநிலத்தவர் கள், இந்த ஜீவசமாதிகளை பார்த்து வணங்கிச் செல்வது வழக்கம்.

மாநில வளர்ச்சிக்காகவும், வருவாய்க்கும் சுற் றுலா இடங்களை கண்ட றிந்து மேம்படுத்தி வரும் புதுச்சேரி அரசு தற்போது கோவில்களையும், கோவில்கள் அமைந்துள்ள நகரங்களையும் இணைத்து ஆன்மிக சுற்றுலா திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தின் மூலம் காரைகக்கால் கடற்கரை மேம்பாட்டிற்கு 20.20 கோடி ரூபாயும், பிரசாத் திட்டத்தின் மூலம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் ஆன்மிக சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு 20 கோடி ரூபாயும் மத்திய சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தை பிரதமர் அண்மையில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அடுத்ததாக புதுச்சேரியில் உள்ள சில கோவில்களையும் ஆன்மிக சுற்றுலா திட்டத்திற்கு தேர்வு செய்து வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது.

அதன்படி புதுச்சேரி கங்கை வராக நதீஸ்வரர் கோவில், ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில்களில் ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்த 69 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது.

இதுமட்டுமின்றி மினி பிரசாத் திட்டத்தின் கீழ் வீராம்பட்டிணம் செங்கழுநீரம்மன் கோவில் மேம்பாட்டிற்கு 5 கோடி, பெரியக்காலாப்பட்டு பாலமுருகன் கோவில் மேம்பாட்டிற்கு 7 கோடி, பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் மேம்பாட்டிற்கு 8 கோடி, காரைக்கால் அம்மையார் கோவில் மேம்பாட்டிற்கு 5 கோடி, கோவில் பத்து பார்வதீஸ்வர் சுவாமி கோவில் மேம்பாட்டிற்கு 5 கோடி, திருவேட்டக்குடி திருமேனி அழகர் சுவாமி கோவில் மேம்பாட்டிற்கு 6 கோடி ரூபாய்க்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்ட அறிக்கைகளுக்கு நிதி கேட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கப்பட்டதும், இந்த கோவில்களில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் துவக்கப்பட உள்ளது.

அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், 'சுதேசி தர்ஷன், மினி பிரசாத் திட்டத்தின் கீழ் ஆன்மிக சுற்றுலா திட்டத்தின் கீழ் திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்பி வைத்துள்ளோம். இது தொடர்பாக காணொலி வாயிலாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி பிறகு நிதி ஒதுக்கும்' என்றார்.



புதுச்சேரி, : ஆன்மிக சுற்றுலா திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களை, 105 கோடி ரூபாயில் மேம்படுத்த விரிவாக திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி

மூலக்கதை