தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சென்னை ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தென்காசி மாவட்டம் புளியாரையைச் சேர்ந்த தம்பதியின் வீர தீரச் செயலைப் பாராட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியாரை கிராமம் ‘எஸ்’-வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், கடந்த 25-ம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து, கீழே செல்லும் செங்கோட்டை- கொல்லம் ரயில் மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தது.

 

அப்போது, அந்தப் பகுதியில் வசித்து வரும் சண்முகையா– வடக்குத்தியாள் தம்பதி, செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த திருவனந்தபுரம் பகவதியம்மன் கோயில் திருவிழா சிறப்புப் பயணி கள் ரயிலை, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று, கையில் வைத் திருந்த டார்ச் லைட் ஒளி மூலம் சைகை காண்பித்து, ரயிலை நிறுத்தி, பெரும் விபத்தைத் தடுத்துள்ளனர்.

 

தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், விபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச் சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா, வடக்குத்தியாள் தம்பதியின் வீரதீரச் செயலைப் பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்தத் தம்பதியர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை 27/02/2024 சந்தித்தனர். அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

மூலக்கதை