பருவ மழை பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அரசு செயலர் ஆய்வு: துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

தினமலர்  தினமலர்
பருவ மழை பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அரசு செயலர் ஆய்வு: துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறைஅலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சியில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, கூடுதல் தலைமை செயலர் பிரதீப்யாதவ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலை வகித்தார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், கூடுதல் தலைமை செயலர் பிரதீப்யாதவ் பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள 8 ஆறுகள், 2 அணைகளில் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட நீர்வளத்துறை, வருவாய்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவ மழையால் அதிகம் பாதிப்படையும் 2 இடங்கள், மிதமாக பாதிக்க கூடிய 2 இடங்கள், குறைவாக பாதிக்க கூடிய 16 இடங்கள் என மொத்தமாக 20 இடங்கள் கண்டறியப்பட்டது.

அந்த இடங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி, மணல் மூட்டைகளை இருப்பில் வைக்க வேண்டும். மழை சேதங்களை மேற்கொள்ள பேரிடர் மீட்பு குழுவினருடன் தன்னார்வலர் குழுக்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், பருவமழை எதிர்கொள்ள 54 ஜெனரேட்டர்கள், 112 ஜே.சி.பி., 16 பொக்லைன், 66 மரம் அறுக்கும் இயந்திரம், 13,500 மணல் மூட்டைகள், 3,740 சவுக்கு கம்புகள், 21,500 காலி சாக்கு பைகள், 17 பவர் பம்புகள், 18 அவசர கால ஜார்ஜ் லைட்டுகள், மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திறியும் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகளை பிடிக்க 7 பாம்பு பிடி வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கும் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை மீட்க பஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சிறுபாலங்கள், சாலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்ய நெடுஞ்சாலை துறையினர் தயாராக இருக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்று, மின்விபத்து ஏற்படாமல் தடையின்றி மின்சாரம் வழங்குதல், மழை வெள்ளத்தால் பாதிப்படையும் பொதுமக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள், நோய்த்தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடமாடும் மருத்துவக்குழுக்கள் ஆகியவற்றை ஏற்படுத்த சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை கொண்டு குழுக்கள் அமைக்க வேண்டும்.

மேலும், வருவாய், காவல், தீயணைப்பு உள்ளிட்ட 10 துறைகளை ஒருங்கிணைத்து அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து தாலுகா அலுவலகத்திலும், கட்டுப்பாட்டு அறை துவங்கி 24 மணி நேர சுழற்சி அடிப்படையில் அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக பேரிடர் மேலாண்மை துறை கட்டுபாட்டு அறை எண் 04151--228801, 1077 ஆகிய தொலைபேசி எண்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் அரவிந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, ஏ.டி.எஸ்.பி., ஜவஹர், ஆர்.டி.ஓ.,க்கள் கிருஷ்ணன்(பொ), கண்ணன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறைஅலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று

மூலக்கதை