சென்னையில் கணினிமயமாகும் மதுபானக் கடைகள்

  தமிழ் முரசு
சென்னையில் கணினிமயமாகும் மதுபானக் கடைகள்

சென்னை: சென்னையில் இனி ரசீது போடாமல் ஒரு மதுப்புட்டிகூட வாங்க முடியாது. ‘பார்கோடு ஸ்கேனர்’ வசதியும் கடைகளில் செயல்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.டாஸ்மாக் மதுக்கடைகளில் எப்பொழுதும் விற்கப்படும் விலையைவிடக் கூடுதலாக ஒரு மதுப்புட்டிக்கு 10 ரூபாய் வாங்குவது இன்னும் சில கடைகளில் தொடர்வதாக மதுவாங்குபவர்கள் புகார் கூறிவருகின்றனர்.இம்மாதிரிப் புகார்களை முழுமையாக நிவர்த்தி செய்வது மட்டுமின்றி கடைகளில் எவ்வளவு சரக்கு விற்பனையாகி உள்ளது? இருப்பு எவ்வளவு உள்ளது? என்பதைக் கண்டறியவும் டாஸ்மாக் கடைகளைக் கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி மென்பொருள் உருவாக்கி மின்னிலக்கமயமாக்கப்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில் அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 14 டாஸ்மாக் கடைகளில் கையடக்கக் கருவி மூலம் ரசீது வழங்கி வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. அப்போது பல குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சரிசெய்தனர்.அதைத் தொடர்ந்து இன்னும் 2 வாரங்களில் சென்னை புறநகர் பகுதிகளிலும் இதைச் செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் 4 ஆயிரத்து 829 கடைகளிலும் மின்னிலக்கமயமாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு கொண்டுவரப்பட்டு ரசீது வழங்கப்படுவதுடன் ‘பார்கோடு ஸ்கேனர்’ வசதியும் கடைகளில் செயல்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை