அவலம்: இருக்கும் இடம் தெரியாமல் போகும் திருச்சிற்றம்பலம் ஏரி...அதிகாரிகள் அலட்சியத்தால் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு

தினமலர்  தினமலர்
அவலம்: இருக்கும் இடம் தெரியாமல் போகும் திருச்சிற்றம்பலம் ஏரி...அதிகாரிகள் அலட்சியத்தால் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு

வானுார்-அதிகாரிகளின் அலட்சியத்தால் திருச்சிற்றம்பலம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளால் இன்னும் சில ஆண்டுகளில் ஏரியே காணாமல் போகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஏரியை மீட்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.வானுார் ஒன்றியத்தில், பேரூராட்சி அளவிற்கு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக, திருச்சிற்றம்பலம் முதல் நிலை ஊராட்சியாக உள்ளது. ஊராட்சிக்கு சொந்தமாக 75 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது. இந்த ஏரி தண்ணீரைக் கொண்டு நெல், சவுக்கை உள்ளிட்ட பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய இந்த ஏரி, நிரம்பினால் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக உயரும்.

இதனால், குடிநீர் பஞ்சம் இருக்காது.ஊராட்சி நிர்வாகம், ஏரியை கடந்த 25 ஆண்டுகளாக துார் வாரவில்லை. இதனால் ஏரி முழுதும் காட்டாமணி செடிகள், முட்புதர்கள் அதிகளவில் மண்டியுள்ளதுடன், துார்ந்து மணல் மேடாகிப்போனது.இதன் காரணமாக தற்போது திருச்சிற்றம்பலம் பகுதியில் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீர் பிரச்னை தலைதுாக்கத் துவங்கியுள்ளது. இது கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சிற்றம்பலம் ஏரி, பஸ் நிலையம் அருகே இருப்பதால் சிலர் ஏரியின் வரத்து வாய்க்காலையும் அடைத்து, ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களைக் கட்டியுள்ளதால் மழைக் காலங்களில் ஏரிக்கு வரும் தண்ணீர் தடைபட்டுப் போனது.ஏரியின் கரையோர பகுதிகளை ஆக்கிரமித்து, 50க்கும் மேற்பட்டோர் வீடுகளைக் கட்டியுள்ளனர். ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெருமாள் கோவில் பகுதியையொட்டி ஏரி இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

இதே நிலையில் அதிகாரிகளின் அலட்சியம் நீடித்தால், நாளடைவில், ஏரி இருந்த சுவடே தெரியாத நிலை ஏற்படும். எனவே, திருச்சிற்றம்பலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விற்பனையும் ஜோர்...ஏரியை பலர் தங்களுக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளனர். இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர்.

குறிப்பாக ஓடு போட்ட வீடு முதல் மாடிவீடுகள் வரை 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வாடகை பெறுகின்றனர். சிலர் ஆக்கிரமிப்பு இடத்தை, பட்டா இல்லாமல் 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்வதாகவும், இது குறித்து பல ஆண்டுகளாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மூலக்கதை