மாமல்லபுரம் அருகே சாலை விபத்து: நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்; பெண் இன்ஜினியர் பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாமல்லபுரம் அருகே சாலை விபத்து: நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்; பெண் இன்ஜினியர் பரிதாப பலி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் கால் எலும்பு முறிந்து படுகாயம் அடைந்தார். அவருடன் சென்ற அமெரிக்க பெண் இன்ஜினியர் பரிதாபமாக இறந்தார்.

தமிழில்துருவங்கள் 16, ஜாம்பி, கவலை வேண்டாம், கழுகு2  உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது தோழியான ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த வந்திசெட்டி பவானி (26) மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன்  நேற்று புதுச்சேரிக்கு ஒரே காரில் சென்றுள்ளனர்.

காரை யாஷிகா ஓட்டினார்.   பின்னர், அங்கிருந்து இரவு 11. 30 மணி அளவில் இசிஆர் சாலை வழியாக சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு என்ற இடத்தில் கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள (சென்டர் மீடியன்) தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், வந்திசெட்டி பவானி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். நடிகை யாஷிகாஆனந்த்துக்கு காலில் எலும்பு முறிவு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன், வந்த 2 ஆண் நண்பர்கள் லேசான காயங்களுடன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரில் வரும்போது 4 பேரும் பாடல் போட்டு டான்ஸ் ஆடி வந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து, பலியான பவானியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்தில் பலியான பவானி அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.

கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து வந்த வந்திசெட்டி பவானி இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்து தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர், காரை அதிவேகமாக ஓட்டுதல், அஜாக்கிரதையாக ஓட்டுவது, உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் யாஷிகா மீது வழக்குப்பதிவு செய்தனர்.   மேலும் போலீசார் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை