வங்கக் கடலில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்கக் கடலில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவக் காற்றும் தீவிரம் அடைந்து கேரளா, மகாராஷ்டிரா மற்றும் அரபிக் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதேபோல் தமிழகத்திலும் தென் மேற்கு பருவக் காற்று பலமாக வீசிவருகிறது. இதனால், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாகவே மழை பெய்து வருகிறது.

சென்னையிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவக் காற்று தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வட கடலோர மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த சூழல் வரும் 25ம் தேதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாளை(23ம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், ஒரு நாள் முன்னதாக இன்று காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும்.

25ம் தேதி வரை தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அதீத கனமழை பெய்யும் என்பதால் ஆந்திரா, தெலங்கானா, மத்திய மகாராஷ்டிரா பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை