கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், சமூக இடைவெளியுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், சமூக இடைவெளியுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

சென்னை:  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், சமூக இடைவெளியுடன் தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினார்கள். ரமலான், பக்ரீத் பண்டிகைகள் இஸ்லாமியர்களின் வாழ்வில் மிக முக்கியமானவை.

ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பிருத்தலை 30 நாட்கள் கடைப்பிடித்து பின்னர் ஈகைத் திருநாள் என்றழைக்கப்படும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இதற்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகை தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை.



இறுதி நபி முகமது நபிக்கு முன்னர் இருந்த நபிகளில் இப்ராஹிம் என்பவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்ற தனது மகனைப் பலியிடும்போது, மகனுக்குப் பதில் ஆட்டைப் பலியிட இறைவன் அருளினார் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. மகனைப் பலியிட்டு, பிரார்த்தனை செய்யத் துணிந்த நபி இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் இஸ்லாமியர்கள் தங்கள் வேண்டுதல் மற்றும் கடமையாக ஆட்டை பலி கொடுத்து அதன் மாமிசத்தை உறவினர், நண்பர்கள், ஏழைகளுக்கு அளித்து மகிழ்வர். ஒவ்வொரு நாட்டுக்கேற்ற வகையில் மாடு, ஒட்டகம் எனவும் பலியிடப்படுகிறது.



இந்த மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை 21ம் தேதி (இன்று) கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் ஆய்யூப் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதில், “ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட இடங்களில் இன்று துல் ஹஜ் மாத பிறை ஷரியத் முறைப்படி தென்பட்டது. எனவே துல் ஹஜ் மாத முதல் பிறாஈ என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருகிறது.

ஆகையால் பக்ரீத் பண்டிகை ஜூலை 21ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், சமூக இடைவெளியுடன் தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது. அதைப்போன்று சென்னை அண்ணாசாலை, மண்ணடி, திருவல்லிக்கேணி, ராயபுரம்,  ராயப்பேட்டை, பல்லாவரம், பெரியமேடு போன்ற பகுதிகளில் உள்ள மசூதிகளில் சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை இன்று காலை நடந்தது. இதில் சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இதில் இஸ்லாமியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகையில் பங்கேற்றதுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

.

மூலக்கதை