3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதேபோல், நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவடங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.   மேலும், கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

.

மூலக்கதை