தமிழக அரசின் முயற்சியால் கொரோனாவால் முடங்கியிருந்த மக்கள் மீண்டதால் கோலாகலம்: கடைசி கட்ட தீபாவளி விற்பனை சூடு பிடித்தது: மழையை மீறி ஜவுளி, பட்டாசு கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக அரசின் முயற்சியால் கொரோனாவால் முடங்கியிருந்த மக்கள் மீண்டதால் கோலாகலம்: கடைசி கட்ட தீபாவளி விற்பனை சூடு பிடித்தது: மழையை மீறி ஜவுளி, பட்டாசு கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை: கடைசி கட்ட தீபாவளி விற்பனை தமிழகம் முழுவதும் சூடுபிடித்துள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஜவுளி, பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. தமிழகத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

ஆனால், அவற்றை கட்டுப்படுத்த கடந்த அதிமுக அரசு தவறியதன் விளைவாக, மார்ச், ஏப்ரல் மாதங்களில் படிப்படியாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 8 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பிறகு தான் விழித்துக்கொண்ட அதிமுக அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தொடங்கியது. அதற்குள் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது.

இதனால், அரசு, தனியார் அலுவலகங்கள், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பல்வேறு தொழில்சார்ந்த பணிகள் முற்றிலும் முடங்கி போய் விட்டது.

 இதனால் சென்னையில் இருந்த பலரும் தங்களது உயிரையாவது காப்பாற்றி கொள்ள வேண்டும் என்கிற பதட்டத்தில் வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றனர். இதனால், பொருளாதாரம் முற்றிலும் நசுங்கியது.

குறிப்பாக பலரும் வேலையில்லாததால், அரசின் நலத்திட்ட உதவிகளை நம்பியிருக்கும் சூழல் இருந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு தீபாவளி கொண்டாட்டம் களையிழந்தது.

மக்கள் யாரிடமும் பணம் இல்லாத சூழ்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆர்வம் காட்டவில்லை. இதனால், ஜவுளி கடைகளில் விற்பனை இல்லாததால் பெரும் பாதிப்பை சந்தித்தது.

பட்டாசு விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால், பல்வேறு தரப்பினரும் கடுமையான பாதிக்கப்படும் நிலை தான் இருந்தது.

இந்த நிலையில், கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்க தற்போதைய தமிழக அரசு சார்பில் தடுப்பூசி போடுவதை ஊக்குவித்தது. அதன்பயனாக நான்கில் மூன்று பங்கு அளவுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது.

 இதனால், கடந்த காலங்களை பார்க்கும் போது தற்போது பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி வெளியில் வரத் தொடங்கி விட்டனர். இதனால், மெல்ல, மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

இதனால், பொருளாதார பிரச்சனையில் இருந்து மக்கள் மீண்டு வரத்தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் தீபாவளி பண்டிகை நாளை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தீபாவளி ஷாப்பிங் செய்ய மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.   தமிழகத்தில் வழக்கம் போல் காலை 10 மணிக்கு கடை திறக்கப்படும். ஆனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக கடந்த ஒரு வாரமாக காலை 8 மணிக்கே திறக்கப்பட்டு, இரவு 12 மணி வரை விற்பனை நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மழையை பொருட்படுத்தால் மக்கள் தீபாவளி ஷாப்பிங் செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னையை பொறுத்தவரையில் வணிகபகுதியான தி. நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் தலைகளாக தான் தெரிகிறது.

தீபாவளி கடைசிக்கட்ட விற்பனை சூடுபிடித்து வருகிறது.

அந்த அளவுக்கு எந்நேரமும் ஷாப்பிங் செய்ய மக்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். அதே போன்று பட்டாசு விற்பனையும் தமிழகம் முழுவதும் களை கட்டியுள்ளது.

பட்டாசு வாங்க மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று வாங்கி வருகின்றனர். தற்போது பசுமை பட்டாசு விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அந்த பட்டாசு பொருட்களை வாங்க சிவகாசிக்கு பல்வேறு பகுதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதனால், சிவகாசிக்கு ஊருக்குள் சென்று வரவே பல மணி நேரம் ஆவதாக தெரிகிறது. சென்னையை பொறுத்தவரையில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் வகையில் பட்டாசு விற்பனைக்கு வந்துள்ளது. அதே போன்று தமிழக அரசின் சார்பில் கூட்டுறவு அங்காடிகளிலும் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.

மற்ற இடங்களை காட்டிலும் இங்கு குறைந்த விலைக்கே பட்டாசு விற்பனை செய்யப்படுவதால், கார்கள், பைக்குகளில் வந்து பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி நேற்று முன்தினம் முதல் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.   இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று அரசு பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு செய்து சென்றனர். நேற்று சென்னை பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

தற்போது ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் பண்டிகை நாட்கள் என்பதால் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதே போன்று தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆயிரக்கணக்கான மக்கள் சிரமங்களின்றி பயணம் செய்தனர். இந்த நிலையில், நாளை தீபாவளி பண்டிகை என்பதால், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று பிற்பகல் பலரும் பஸ், ரயில், தங்களது சொந்த வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதற்காக, இன்று பிற்பகல் பிறகு மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற நீண்டதூர பயணங்கள் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பஸ் சேவைக்கு இயக்க ஏற்பாடு ெசய்யப்பட்டுள்ளது.

அதே போன்று ரயில்கள் மூலமாக பலர் செல்வார்கள். நேற்று வரை 3 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று 2 லட்சம் பேர் வரை செல்ல வாய்ப்புள்ளது.

எனவே, அதற்கேற்ப தமிழக போக்குவரத்து துறை சார்பில் ேதவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

.

மூலக்கதை