பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குரூப் 1 பிரிவில் பணி நியமன ஆணை வழங்கினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குரூப் 1 பிரிவில் பணி நியமன ஆணை வழங்கினார்

சென்னை: பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று அவருக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1. 89 மீட்டர் உயரத்தை தாண்டி அசத்திய மாரியப்பன் அந்த தொடரில் தங்கம் வென்றார். இதனால் தற்போது நடைபெற்ற போட்டியிலும் மாரியப்பன் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 1. 86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து இந்தியா வந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.


டெல்லி வந்த மாரியப்பன் தங்கவேலுவை நேரடியாக டெல்லி சென்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வரவேற்பு கொடுத்தார்.

இதையடுத்து சென்னை வந்த மாரியப்பன் நேரடியாக அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

இதில் அவர் வைத்த முக்கியமான கோரிக்கையாக தனக்கு அரசு வேலை வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.  

கடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற போதே அவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது.

முக்கியமாக குரூப் 1 பிரிவில் அவருக்கு தமிழ்நாடு அரசில் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 2016ல் இவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதிமுக அரசு வழங்கவில்லை. அவருடன் பதக்கம் வென்ற மற்ற மாநில வீரர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.

ஆனால் இவருக்கு மட்டும் கடந்த அதிமுக அரசு வேலை வழங்கவில்லை. வேலை கிடைக்காத நிலையிலும் மாரியப்பன் மிக தீவிரமாக அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தயார் ஆகி, உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

தனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது மாரியப்பன் தங்கவேலுவின் நீண்ட நாள் கனவாக இருந்தது. முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதால் தனக்கு வேலை கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தார்.

 கடந்த 5 ஆண்டுகளாக அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிக் கொண்டு இருந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அளித்த உறுதியின் படி, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இவருக்கு அரசு துறையில் உயர் பதவியான குரூப் 1 பிரிவில் அரசு வேலையை தமிழக அரசு வழங்கியுள்ளது.   பணி நியமன ஆணையை, தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு. க. ஸ்டாலின், பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவிடம் வழங்கினார். அதன்படி, மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழ்நாடு காகித நிறுவனத்தில் வர்த்தக பிரிவில் துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியுடன் பணி ஆணையை பெற்றுக் கொண்ட மாரியப்பன் முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
வெளியில் வந்த மாரியப்பன் தங்கவேலு நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் எனக்கு வேலை வாய்ப்பு கேட்டு கோரிக்கை வைத்திருந்தேன். அவர் இன்று அதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

.

மூலக்கதை