காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் ஏரிகள் நிறைந்ததாகும்.

இங்கு சில நாட்களாக பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொது பணித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 900 ஏரிகள் மற்றும் ஒன்றிய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுமார் 1500 ஏரிகள், 50 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளது.

மேலும், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பாலாற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் மதுராந்தகம், ெகாண்டங்கி, மானாமதி, பொன்விளைந்தகளத்தூர் ஆகிய பெரிய ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் பொதுப்பணி துறையினர், ஏரிகளின் கரைகளை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாலாஜாபாத்தில் உள்ள தாமல் ஏரி நிரம்பியதால் உபரிநீர் பாலூர், ரெட்டிபாளையம், வடகால் வழியாக செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் நீஞ்சல்மடு அணைக்கு வந்தடைகிறது. இதனால் நீஞ்சல்மடு அணை நிரம்பி, உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.   நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள், முழு வீச்சில் ஈடுபட்டு, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு வசதியாக ஆங்காங்கே சமுதாய கூடம், பள்ளிகள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தொடங்கியது. மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழையளவு (மிமீ) விவரம் வருமாறு: திருப்போரூர்-21, செங்கல்பட்டு- 7, திருக்கழுக்குன்றம்-25. 2, மாமல்லபுரம்- 46. 4, மதுராந்தகம்-33, செய்யூர்- 39. 2, தாம்பரம்-10, கேளம்பாக்கம்- 37. 6.

சராசரி-27. 42

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான விஷார், கோவிந்தவாடி அகரம், கீழ்கதிர்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து ஏனாத்தூர் செல்லும் சாலையில் கோனேரிக்குப்பம் பகுதியில் ரயில்வே கிராசிங் அருகே சாலை சேதமடைந்துள்ளது.

இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் பாலாறு உப வடி நில கோட்டத்தின் கீழ் உள்ள 1022 ஏரிகளில் 96 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 91 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 99 ஏரிகள் 70 சதவீதத்திற்கு அதிகமாகவும், 65 ஏரிகள் 50 சதவீதத்திற்கு அதிகமாகவும், 51 ஏரிகள் 25 சதவீதத்திற்கு அதிகமாகவும் நிரம்பி உள்ளன.

பாலாறு மற்றும் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகளான மாகறல், திருமுக்கூடல் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி நீர்வீழ்ச்சி போல் உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பல இடங்களில் விவசாய பணிகள் தொடங்கியுள்ளது.

மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றானது உத்திரமேரூர் ஏரி, 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது.

சித்தேரி, பெரிய ஏரி என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தமுள்ள 13 மதகுகள் வழியாக பாசன நீர் திறக்கப்படும். சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.

தற்போதைய மழையால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போர்கால அடிப்படையில் உபரிநீர் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதால், உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகள் அனைத்திற்கும் முறையாக மழை நீர் சென்றடைகிறது.

மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் (மி. மீ): காஞ்சிபுரம்-9. 46. பெரும்புதூர்-2, உத்திரமேரூர்- 21, வாலாஜாபாத்- 7. 38, செம்பரம்பாக்கம்- 12, குன்றத்தூர்- 14. 12.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் பரவலாக சாரல் மழை பெய்தது.

திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிஒரு சில இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தொடர் மழையால் விவசாய பணிகள் ஜரூராக தொடங்கியுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி பெய்த மழையளவு (மிமீ) விவரம் வருமாறு: கும்மிடிப்பூண்டி-36, திருத்தணி-8, திருவாலங்காடு- 8, பள்ளிப்பட்டு-3, ஆர். கே. பேட்டை-4, ஊத்துக்கோட்டை- 13, பூந்தமல்லி- 15, ஜமீன் கொரட்டூர்-13, திருவள்ளூர்- 12, பொன்னேரி- 59, செங்குன்றம்- 19, சோழவரம்- 25, தாமரைப்பாக்கம்- 14, பூண்டி- 13, சராசரி- 17. 28.

.

மூலக்கதை