இலங்கை தமிழர்களுக்காக 3,510 குடியிருப்புகள் கட்டும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை தமிழர்களுக்காக 3,510 குடியிருப்புகள் கட்டும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வேலூர்: தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு குடியிருப்புகள் அமைக்கப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்புகள் அமைப்பதற்காக வேலூர் அடுத்த மேல்மொணவூரில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை 10 மணியளவில் வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு முகாம்களுக்காக 142. 16 கோடி செலவில் 3510 குடியிருப்புகள் அமைப்பதற்கான திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர், வேலூரில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது: இலங்கை தமிழர்களுக்கு திமுக இதற்கு முன்பும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது.

புலம்பெயர்ந்து தாய் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளீர்கள்.

இலங்கையில் நீங்கள் விட்ட கண்ணீர், எங்களுக்கு தெரியும். இலங்கை தமிழர்களுக்கு திமுக என்றும் உறுதுணையாக இருந்து வருகிறது.

கடந்த 1983ம் ஆண்டு முதல் ஈழ தமிழர்கள் தமிழகத்திற்கு வரத்தொடங்கினர். அவர்கள் முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டனர்.

கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. 1997ல் இலங்கை தமிழர்களுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

ஆனால் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்காக எவ்வித திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தற்போதைய திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன், சட்டமன்றத்தில் நான் பேசியபோது, இலங்கை தமிழர்கள் முகாமை, இனி, இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் என அறிவித்தேன்.

கடந்த 1997-98ம் ஆண்டுகளில் 3,504 வீடுகளும், கடந்த 1998-99ல் 3,824 வீடுகளும் கட்டிதரப்பட்டது. 2009ம் ஆண்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது.

இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி 106 முகாம்களுக்கு சென்று அங்குள்ள பிரச்னை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டேன். இன்று முதற்கட்டமாக 3,510 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறேன்.

இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள 19,046 குடும்பத்தினர் வசிக்கும் மிக பழுதடைந்த 7,469 குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகள் தங்கி படிப்பதற்கான விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும்.

உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை விரைவில் வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகாலமாக உயர்த்தி தரப்படாத உதவித்தொகையை உயர்த்தி வழங்கப்படும்.

இதேபோல் அலுமினிய ெபாருட்களுக்கு பதிலாக, எவர்சில்வர் பாத்திரங்கள் வழங்கப்படும். கோ-ஆப்டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் வழங்கப்படும்.

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற கலைஞரின் வழிகாட்டுதல்படி நாங்கள் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

12. 43 கோடியில் பணக்ெகாடையும், 2. 40 கோடியில் பாத்திரங்கள், 8. 66 கோடியில் எரிவாயு இணைப்புகள் ஆகியவை மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது. அரிசி வாங்கும் செலவை அரசு ஏற்கும்.

கல்லூரி மாணவர்களுக்கு இலவச கல்வி, சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படும். இலங்கை வாழ் தமிழர் மேம்பாட்டுக்காக 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு 290 சதுர அடியில் வீடுகள் கட்டிதரப்படுகிறது. இது முடிவல்ல, இன்னும் பல திட்டங்கள் தொடரும்.

மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் அமைச்சர்கள் மூலம் தொடங்கி வைக்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு திமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

நீங்கள் ஆதரவற்றவர்கள் அல்ல, எங்களது உடன்பிறந்தவர்கள். எனவே உங்களுக்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.

எத்தனை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

''முதல்வர் தொடங்கிய பணிகள்''
வேலூர் மேல்மொணவூரில் 891 லட்சம் மதிப்பில் 220 புதிய வீடுகளும், 48. 25 லட்சம் மதிப்பில் சாலை, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளும், 16. 76 லட்சம் காசோலைகள் 996 பேருக்கும், 7. 22 லட்சம் மதிப்புள்ள துணிமணிகள் 996 பேருக்கும், 4. 09 லட்சம் மதிப்பில் இலவச பாத்திரங்கள் 312 குடும்பத்தினருக்கும், 4. 64 லட்சம் மதிப்பில் இலவச எரிவாயு உபகரணங்கள் 162 குடும்பங்களுக்கும், 17. 29 லட்சம் மதிப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆணை மற்றும் உபகரணங்கள் 99 பேருக்கும், 11. 75 லட்சம் மதிப்பில் சுய உதவி குழுக்கள் மற்றும் சமுதாய முதலீட்டு நிதிக்கான காசோலைகள் 13 பேருக்கும் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு காசோலைகள் என மொத்தம் 10 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் வழங்கினார். இதேபோல் மாநிலம் முழுவதும் 142 கோடி மதிப்பில் இன்று இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

இலங்கை தமிழர்கள் உருக்கம்''
விழா முடிந்தவுடன் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் கைவினை பொருட்கள், புதிய குடியிருப்புகளின் மாதிரி வரைபடங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதையடுத்து இலங்கை வாழ் தமிழர்கள் தற்போது வசிக்கும் குடியிருப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு திடீரென சென்ற முதல்வர், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அங்கிருந்த குழந்தைகளை தூக்கி கொஞ்சினார். பின்னர் அவர்கள் அனைவருடனும் ‘செல்பி’ எடுத்துக்கொண்டார்.

அப்போது அவர்கள், ‘இதுவரை எந்த முதல்வரும் முகாமுக்கு வந்து பார்த்ததில்லை.

ஆனால் நீங்கள்தான் முதன்முறையாக வந்துள்ளீர்கள்’ என உருக்கமுடன் நன்றி தெரிவித்தனர்.

.

மூலக்கதை