சென்னையில் வெளுத்து வாங்கியது: தீபாவளி வரை கனமழை தொடரும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் வெளுத்து வாங்கியது: தீபாவளி வரை கனமழை தொடரும்

* கண்காணிப்பு வளையத்தில் அணைகள்
* பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை கடலோரப் பகுதி, தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் 4ம் தேதி வரை  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் சென்னை உள்பட பல்வேறு  மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக  நிரம்பி வருகின்றன.   இதையடுத்து அவை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை  அரசு முடுக்கிவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை கடலோரப் பகுதி, தென் தமிழக கடலோர  பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதையடுத்து புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கடலூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

கன்னியாகுமரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யலாம். இதர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மித மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதேபோன்று 3ம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தீபாவளி நாளான 4ம் தேதியும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

குமரிக் கடல், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் மணிக்கு 40 கி. மீ முதல் 50 கி. மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரளா, லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு நாளை மறுநாள் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது.

அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் அதன் முழு கொள்ளளவை வேகமாக எட்டும் நிலையில் உள்ளது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனைத்து அணைகளையும் தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

நீர்நிலைகள் நிரம்பும்பட்சத்தில் உடனடியாக உபரி நீரை வெளியேற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாலும், ஆற்றங்கரையோர மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

 

 குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. அதிகாலை முதல் தூறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக வடசென்னை பகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு ஒரு மணி நேரமாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, தி. நகர், எழும்பூர், திருவல்லிக்கேனி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

 இதேபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு முதல் விடிய விடிய லேசான மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இதனால் ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைமை செயலாளர் திடீர் ஆலோசனை
 தமிழகத்தில் வரும் 4ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

இதற்கிடையே, அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளன. இந்நிலையில், இன்று காலை தலைமை செயலாளர் இறையன்பு தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது, வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாவட்ட கலெக்டர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

அதில், மழை பாதிப்பை தடுக்கும் வகையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நெல்லை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை