தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8ம் வகுப்புக்கு பள்ளிகள் நாளை திறப்பு: மாணவ, மாணவிகள் உற்சாகம் இனிப்பு, பூக்கள் கொடுத்து வரவேற்க ஏற்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8ம் வகுப்புக்கு பள்ளிகள் நாளை திறப்பு: மாணவ, மாணவிகள் உற்சாகம் இனிப்பு, பூக்கள் கொடுத்து வரவேற்க ஏற்பாடு

சென்னை: தமிழகத்தில்  19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்காக நாளை பள்ளிகள்  திறக்கப்பட உள்ளது. இனிப்பு, பூக்கள் கொடுத்து மாணவர்களை வரவேற்க  ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக  தமிழகத்தில் 2020ம் ஆண்டு மார்ச் 2வது வாரத்தில் பள்ளி, கல்லூரிகள்  மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து மாணவர்கள் நலன்கருதி பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டன.

மேலும் கல்வி  தொலைக்காட்சி வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்தன.

கொரோனா  பரவல் குறைந்து வந்ததால் 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 10, 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டது. அதைதொடர்ந்து 9, 11ம்  வகுப்புகளுக்கும் பிப்ரவரி மாதம் நேரடி வகுப்பு துவங்கியது.

இதற்கிடையே  கொரோனா 2வது அலை வேகமாக பரவியதால் கடந்த மார்ச் 22ம் தேதி 9, 10, 11, 12ம்  வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டன.   பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு, பொதுத்தேர்வுகளில் ஆல்பாஸ்  வழங்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா 2வது அலை பரவல் குறைந்ததால்  வழிகாட்டு நெறிமுறைகளுடன் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர்  1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து  வருகிறது.

அதேபோல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. 2வது அலை  கட்டுக்குள் வந்ததால் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க  மருத்துவ நிபுணர்கள், கல்வி அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனையை முதல்வர்  மு. க. ஸ்டாலின் நடத்தினார்.



இதைதொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி(நாளை) முதல் பள்ளிகள் துவங்கும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

நடப்பாண்டில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில்  24. 32 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 6 முதல் 8ம் வகுப்பு வரை 11. 83 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

இவர்களுக்கு சுழற்சி முறையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம்   கிடையாது.

பள்ளிக்கு வர மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்   பொய்யாமொழி தெரிவித்தார். வகுப்புகள் துவங்கி முதல் 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான கதை சொல்லுதல், பாடல், விளையாட்டு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், அனுபவ பகிர்வு குறித்து கற்பிக்கப்படும்.

அதைதொடர்ந்து புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தப்படும். அதன்பிறகு பாடங்கள் நடத்தப்படும்.

நாளை திறக்கப்படுவதையொட்டி பள்ளிகளில் கடந்த சில நாட்களாக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வட்டம் போடும் பணிகள் நடந்து வருகின்றன.

மாணவ, மாணவிகள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படும்.

100 டிகிரி வெப்பம் உடைய மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், மாணவ, மாணவிகளும் உற்சாகமடைந்துள்ளனர்.

புத்தகப்பை, சீருடை, பேனா, பென்சில், லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் பணிகளில்  மாணவர்களும், பெற்றோரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பொருட்களை வாங்க ஸ்டேஷனரி கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் குழந்தைகளை விருந்தினரை போல் வாசலில் நின்று  வரவேற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி மாணவ, மாணவிகளை வரவேற்க ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர்.

இதுபற்றி  ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

மாணவ, மாணவிகளை வாசலில் நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் இனிப்புகள், ரோஜா பூக்கள் வழங்கி மாணவர்களை வரவேற்க தயாராக உள்ளோம். மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக வைத்திருக்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

குழந்தைகளை கண்டிக்காமல் மகிழ்ச்சியுடன் கல்வி கற்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

.

மூலக்கதை