அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் ‘சஸ்பெண்ட்’ ரத்து: தமிழக அரசு ஆணை வெளியீடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் ‘சஸ்பெண்ட்’ ரத்து: தமிழக அரசு ஆணை வெளியீடு

சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை தவிர்க்கப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி விதி 110ன் கீழ் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில் ‘‘ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்களை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்” என்று அறிவித்தார். இதையடுத்து, தமிழக மனிதவள மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது.



அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி விதி 110ன் கீழ், ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்களை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதன் அடிப்படையில் இந்த புதிய நடைமுறையை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.

தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மீது நடைபெறும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அந்த ஊழியர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.

சில வழக்குகளில் தவறு செய்யும் அரசு ஊழியர்களுக்கு எதிரான விசாரணை நீண்டகாலம் நடத்தப்படும்போது அந்த ஊழியர்கள் ஓய்வு பெறுவதை நிறுத்திவைக்கும் வகையில் அவர்கள் தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கப்படுவார்கள்.

துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க அரசு உரிய வழிகாட்டுதல்களை அறிவிக்கிறது. தவறு செய்யும் அரசு ஊழியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதாக தெரியவந்து விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் என்ற முடிவுக்கு வரும்பட்சத்தில் அந்த ஊழியர்களை தற்காலிக பணி நீக்கத்தில் வைத்திருக்கலாம்.



இதுபோன்ற வழக்குகளில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே ஒழுங்கு நடவடிக்கையின் மீதான முடிவுக்கு வரவேண்டும். அரசு ஊழியர் ஒருவர் பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வரும் குற்றச்சாட்டுகள் மீது அவர் ஓய்வு பெறுவதற்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்பே அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்க வேண்டும்.

பல வழக்குகளில் ஒழுங்கு நடவடிக்கையை செயல்படுத்தும் அதிகாரிகள் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசு ஊழியர்களை ஓய்வு பெற விடாமல் அவர்களின் ஓய்வு நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்துவிடுகிறார்கள்.

எனவே, ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு கடுமையானதா அல்லது குறைந்ததா, பணி நீக்கம் செய்யவோ அல்லது பணி இடைநீக்கம் செய்யவோ குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதா என்பதை சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன்னதாகவே ஆய்வு செய்ய வேண்டும்.



இதன் மூலம் தேவையில்லாத தாமதத்தை தவிக்க முடியும். ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரிகள் விசாரணை மற்றும் நடவடிக்கையை முடிக்கக்கூடிய கால அளவை கடைபிடிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட ஊழியர் ஓய்வு பெறும் நாளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு விளக்கம் தர உரிய வாய்ப்பை அளித்து இயற்கை நியதிக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறைகள் எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

இதை ஆய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை தவிர்க்க துறை ரீதியான நடவடிக்கைகளை 3  மாதங்களுக்கு முன்பே முடிக்க வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கையில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் நிர்வாக ரீதியான தாமதம் என்ற அடிப்படையில் சம்மந்தப்பட்ட அரசு ஊழியரை ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு முறைகேடு செய்தது தெரியவந்தால் போர்க்கால அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய முடிவை எடுக்க வேண்டும்.



தவறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்கீழ் சம்மந்தப்பட்ட ஊழியரை தற்காலிக பணி நீக்கம் செய்யலாம். குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையில் தாமதம் ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை